விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான வழக்கு: பிரித்தானிய நீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை

Report Print Kabilan in பிரித்தானியா

தொழிலதிபர் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான வழக்கு விசாரணை இன்று பிரித்தானிய நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் பிரித்தானியாவுக்கு தப்பியோடினர். அதனைத் தொடர்ந்து, அவர் மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

பின்னர், அவரது பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. மேலும், விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக் கோரி வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கானது, லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் முதல் வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. விஜய் மல்லையாவின் வழக்கறிஞர், அரசியல் ரீதியாக மல்லையாவின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அவர் அப்பாவி என்றும் வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 2ஆம் வாரத்தில் இவ்வழக்கில் முக்கிய வாதம் தொடங்கும் என்று கருதப்பட்ட நிலையில், தாமதம் ஏற்பட்டதால் இன்று மீண்டும் விசாரணை தொடங்க உள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்துள்ளபடி இருதரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பின்னர், விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்