ஆப்பிரிக்க தலைவரின் 25 ஆடம்பர கார்களை ஏலத்தில் விடும் சுவிஸ் நிர்வாகம்: வெளிவரும் பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பணமோசடி விவகாரத்தில் சிக்கிய ஆப்பிரிக்க அரசியல் தலைவர் ஒருவரது மகனின் 25 ஆடம்பர கார்களை சுவிஸ் நிர்வாகம் ஏலத்தில் விட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான எக்குவடோரியல் கினியாவின் துணை ஜனாதிபதியின் 25 ஆடம்பர கார்களே தற்போது சுவிஸ் நிர்வாகத்தினரால் ஏலத்திற்கு விடப்படுகிறது.

48 வயதான தியோடோரோ நுயெமா ஒபியாங் மாங்கு என்பவரின் இந்த 25 சொகுசு கார்களும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெனீவா பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

ஆப்பிரிக்க நாடு ஒன்றில் அதிக காலம் ஜனாதிபதியாக செயல்பட்டு வருபவர் என பெயரெடுத்தவர் Teodoro Obiang Nguema. நாட்டில் பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு வழக்கில் சிக்கியவர் இந்த தியோடோரோ ஒபியாங் நுயெமா.

இவரது மகனே தற்போது சுவிட்சர்லாந்தில் முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் சிக்கியுள்ளவர். பணமோசடி மற்றும் பொது சொத்துக்களின் மீது தவறான மேலாண்மை உள்ளிட்ட வழக்குகள் இவர் மீது உள்ளன.

இவரது சொகுசு கார்களை ஏலம் விடுவது மூலம் திரட்டப்படும் தொகையை எக்குவடோரியல் கினியாவில் அப்பாவி பொதுமக்களுக்காக பயன்படுத்தப்படும் என சுவிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் வளம் மிகுந்த எக்குவடோரியல் கினியாவில் தற்போது மொத்த மக்கள்த் தொகையில் 80 சதவிகித மக்கள் ஏழ்மையில் உள்ளனர்.

ஒபியாங் மீதான பணமோசடி வழக்கை, இந்த 25 சொகுசு கார்களை ஏலத்தில் விடுவது மூலம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம், சுவிஸ் நிர்வாகத்தால் கைப்பற்றப்பட்ட 25 கார்களையும் விடுவிக்க வேண்டும் என எக்குவடோரியல் கினியாவின் கோரிக்கையை சுவிஸ் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers