சுவிட்சர்லாந்தில் அகதிகளைக் குறிவைத்து ஒரு மோசடி! எச்சரிக்கும் அரசு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

தங்களை சுவிஸ் அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் சில மோசடியாளர்கள், அகதிகளையும் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் அந்நிய நாட்டவர்களையும் தாங்கள் கேட்கும் பணத்தைத் தராவிட்டால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என மிரட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த மோசடியாளர்கள் தாங்கள் எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் என்றும் புலம்பெயர்வோருக்கான மாகாண செயலகத்தைச் சார்ந்த அல்லது ஃபெடரல் பொலிஸ் அதிகாரிகள் என்றும் கூறி மக்களை ஏமாற்றி வருவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கைக் கொடுத்து அதில் குறிப்பிட்ட ஒரு தொகையை செலுத்தாவிட்டால், அவர்களது வாழிட உரிமை பறிக்கப்படும் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என அகதிகளையும் அயல் நாட்டவரையும் அவர்கள் மிரட்டி வருகிறார்களாம்.

உண்மையில் இத்தகைய ஒரு நடைமுறையே கிடையாது என்றாலும், பணம் செலுத்துவது தங்கள் புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உதவும் என அகதிகள் எண்ணுகிறார்கள்.

வெளியாகியுள்ள இந்த செய்தியை உறுதி செய்துள்ள புலம்பெயர்வோருக்கான மாகாண செயலகம், அகதிகளிடம் தொடர்பு கொள்வோர் ஆங்கிலத்தில் பேசுவதாக தங்களுக்கு எல்லை பாதுகாவலர்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எனவே உடனடியாக செயல்பட்டு அகதிகளையும் புலம்பெயர்தல் அதிகாரிகளையும் இந்த மோசடி குறித்து எச்சரித்துள்ளதாக புலம்பெயர்வோருக்கான மாகாண செயலகம் தெரிவித்துள்ளது.

யாரேனும் இப்படி பணம் கேட்டு மிரட்டினால் உடனடியாக புகாரளிக்குமாறு அகதிகள் மற்றும் அயல்நாட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers