பெண்களை கடத்தி பாலியல் தொழிலுக்குள் தள்ளும் கும்பலை ஒழிக்கும் நடவடிக்கையில் சுவிஸ் பொலிஸ்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஐரோப்பா முழுவதும் இளம்பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலுக்குள் தள்ளும் ஒரு பெரிய கும்பலைப் பிடிப்பதற்கான மாபெரும் ரெய்டு ஒன்றில் சுவிஸ் பொலிசாரும் பங்கேற்றனர்.

அந்த கும்பலின் தலைமையகம் ரொமேனியாவில் உள்ளதாக கருதப்படும் நிலையில், அந்த கும்பலை ஒழிக்கும் முயற்சியில் சுவிஸ் பொலிசார் பங்கேற்றனர்.

ரொமேனியாவில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலைமையில் சுவிட்சர்லாந்திலுள்ள பல இடங்களில் ரெய்டு நடந்ததை லாசேன் நகர பொலிசார் உறுதி செய்தனர். மேலும் ஐந்து பேர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ரொமேனியாவில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள்.

பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட 15 இளம்பெண்களும் அவர்களை வைத்து பாலியல் தொழில் நடத்தும் 9 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இதில் கொடுமை என்னவென்றால், அந்த பெண்கள் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அவர்களது முதலாளிகளிடம் கொடுத்து விட வேண்டுமாம். இல்லையென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டப்பட்டிருக்கிறார்கள் அந்தப் பெண்கள்.

அந்த பெண்கள் உடல் நோக சம்பாதிக்கும் பணத்தை அவர்களது முதலாளிகள் ரொமேனியாவில் உள்ள தங்கள் முதலாளிகளுக்கு அனுப்பிவிட வேண்டும்.

அவர்கள் அந்த பணத்தை ஆடம்பர கார்கள் வாங்கவும், சூதாடவும் பயன்படுத்துவார்களாம்.

2016ஆம் ஆண்டு ஒரு இளம் பாலியல் தொழிலாளி ஒரு வாடிக்கையாளரால் லாசேனுக்கு வெளியில் கொல்லப்பட்டாள்.

ரொமேனியாவைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணின் உடல் பிரான்சில் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்