ஆண்களுக்கு மட்டும் ஒரு செய்தி: உங்கள் விலைமதிப்பற்ற சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

உங்கள் விலைமதிப்பற்ற சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று ஆண்களுக்கு அறிவுரை கூறுகிறது சுவிஸ் நிறுவனம் ஒன்று.

சுவிஸ் நிறுவனம் இப்படி கூறுவதால், உடனே நீங்கள் உங்கள் முதலீடுகள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றைக் குறிப்பிடுவதாக எண்ணி விடவேண்டாம். அவர் குறிப்பிடுவது ஆண்களின் உயிரணுக்களைக் குறித்து.

அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை, கடந்த 40 ஆண்டுகளுக்குள் 50 சதவிகிதத்திற்கும் அதிகம் குறைந்து விட்டதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதற்கு மன அழுத்தம், புகைப்பிடித்தல், உடல் பருமன் மற்றும் பூச்சி மருந்துகள்

மற்றும் வேதிப்பொருட்களின் பயன்பாடு ஆகியவை காரணமாக கருதப்படுகின்றன. ஆண்களின் நோய்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பான துறையில் பேராசிரியராக இருக்கும் Allan Pacey என்பவர், ஆண்கள் தங்கள் குடும்ப வாழ்வை தொடங்கும்போதுதான் குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் குறித்து யோசிக்கிறார்கள்.

அவ்வாறின்றி தாங்கள் இனப்பெருக்க ரீதியாக ஆரோக்கியமாக இருக்கும்போதே குடும்ப வாழ்வு குறித்து சிந்தித்தால் இந்த பிரச்சினையை பெரிதும் தவிர்க்கலாம் என்கிறார்.

பல ஆண்கள், குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்யும்போதுதான் தங்கள் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்தே யோசிக்கிறார்கள்.

குழந்தையில்லாத தம்பதியியரில் பாதி பேரில் ஆண்களிடம்தான் பிரச்சினை இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஆண்களின் உயிரணுக்களை சேகரித்து உறைநிலைக்கு கொண்டு சென்று அவற்றை பாதுகாக்கும் அமைப்பு ஒன்றை சுவிட்சர்லாந்தில் துவங்கியுள்ளார் Khaled Kteily என்னும் இளைஞர்.

தனது நண்பர் ஒருவர், தனது 30ஆவது வயதில் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டபோது, தனது உயிரணுக்களை உறையச் செய்து பாதுகாப்பது குறித்து கூறியபிறகே, Khaledக்கு இந்த யோசனை ஏற்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்தையடுத்து உயிரணுக்களை உறையவைத்து சேமிக்கும் ஒரு அமைப்புக்கு சென்று தனது உயிரணுக்களை சேமிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டபோதுதான், அது எவ்வளவு அசௌகரியமாக உணரச் செய்யும் ஒரு விடயம் என்பதை உணர்ந்திருக்கிறார் Khaled.

மற்றவர்களும் இதேபோல்தான் உணர்வார்கள் என்பதை உணர்ந்து கொண்ட Khaled, தனது நிறுவனத்தில் வீட்டிலிருந்தே உயிரணுக்களை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பும் முறையைக் கையாள்கிறார்.

அதேபோல் அவரது அலுவலகக் கூட்டாளியான Dorota Partyka என்பவரும், உயிரணுக்களை சேகரிப்பது மட்டுமல்ல, அவை ஆற்றலுள்ளவையாக, குறையற்றவையாக உள்ளனவா என்பதிலும் கவனம் செலுத்துவதாகவும், அவ்வாறு இன்றி தரமற்ற உயிரணுக்களை சேமித்து வைப்பதில் அர்த்தமே இல்லை என்பதால், ஆண்கள் தங்கள் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளும் சில கருவிகளையும் தாங்கள் தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்