சுவிட்சர்லாந்தில் தொலைக்காட்சி உரிமக் கட்டணம் கட்டாயமாக்கப்படுகிறது

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து தொலைக்காட்சி மற்றும் ரேடியோவுக்கான உரிமக் கட்டணம் கட்டாயம் ஆக்கப்படும் நிலையில், அது தொடர்பான சில முக்கிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் ஒரே கட்டாயக் கட்டணம்

2019இலிருந்து சுவிட்சர்லாந்திலுள்ள அனைத்து வீடுகளும் தொலைக்காட்சி மற்றும் ரேடியோவுக்கான உரிமக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

முன்பு தொலைக்காட்சி மற்றும் ரேடியோ போன்ற உபகரணங்களை வைத்திருக்கும் வீடுகள் மட்டுமே இந்தக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.

அடுத்த ஆண்டிலிருந்து தொலைக்காட்சி இருக்கிறதா அல்லது ரேடியோ இருக்கிறதா என்பதை எல்லாம் கணக்கில் எடுக்காமல் அனைவரும் கட்டாயமாக இந்த கட்டணத்தைச் செலுத்தியே ஆக வேண்டும்.

தற்போது தொலைக்காட்சி, ரேடியோவில் மட்டுமல்லாது, ஸ்மார்ட் போன்கள், கணினி மற்றும் டேப்லட்டுகளிலும் மக்கள் சினிமா பார்க்கவும் ரேடியோ கேட்கவும் தொடங்கியுள்ளதையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இனி குறைந்த கட்டணம்தான்

2018ஆம் ஆண்டு வீடொன்றிற்கு 451 சுவிஸ் ஃப்ராங்குகளாக இருந்த உரிமக்கட்டணம், 2019இல் 365 ஃப்ராங்குகளாக குறைக்கப்படுகிறது.

ஆனால் ஆண்டொன்றிற்கு 500,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வருவாய் பார்க்கும் நிறுவனங்கள், அவர்களிடம் தொலைக்காட்சி இருக்கிறதோ இல்லையோ கட்டணம் கட்டித்தான் ஆக வேண்டும்.

ஒரு பெயர் மாற்றம்

இதுவரை Billag என்ற நிறுவனம் வீடுகளிலிருந்து உரிமக் கட்டணத்தை வசூலித்து வந்தது, இனி அந்த வேலையை SERAFE என்ற நிறுவனம் செய்யும்.

நிறுவனங்களுக்கு சுவிஸ் ஃபெடரல் வரி நிர்வாகமே கட்டண வசூல் செய்யும்.

மிகச் சில விதி விலக்குகள்

தற்போது 10 சதவிகித வீடுகள் உரிமக் கட்டணம் செலுத்துவதில்லை. அந்த அளவு இன்னும் குறைய இருக்கிறது.

தொலைக்காட்சிப் பெட்டி, ரேடியோ, இணைய இணைப்பு கொண்ட ஸ்மார்ட் போன் அல்லது பிற மின்னணு உபகரணங்கள் எதுவும் இல்லை என நிரூபிக்கும் வீடுகளுக்கு மட்டும் இனி கட்டணம் கிடையாது.

AHV/AVS பென்ஷன் பெறுவோர், IV/AI இயலாமை காப்பீடு பெறுவோர் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கும் இந்த கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

2019இல் மட்டும் இரண்டு பில்கள்

ஒலி/ஒளிபரப்புச் சேவை வழங்குவோருக்கு தொடர்ச்சியாக வருவாய் இருக்க வேண்டும் என்ற நோக்கில் சுவிட்சர்லாந்திலுள்ள வீடுகளை மாதத்திற்கு ஒரு குழு என வருடத்திற்கு 12 குழுக்களாக SERAFE பிரிக்கவுள்ளது.

புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் நிர்வாக வசதிக்காக பெரும்பாலான வீடுகளுக்கு 2019இல் இரண்டு பில்கள் வரும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்