கட்டமைப்பு சார் இனவழிப்புச் சூத்திரதாரி ரெஜினோல்ட் குறே யின் சுவிஸ் வருகையை சுவிஸ் வாழ் தமிழீழ மக்கள் புறக்கணிப்போம்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

கட்டமைப்பு சார் இனவழிப்புச் சூத்திரதாரி ரெஜினோல்ட் குறே யின் சுவிஸ் வருகையை சுவிஸ் வாழ் தமிழீழ மக்கள் புறக்கணிப்போம்.

சோரம் போகும் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,

எதிர்வரும் 11.10.2018 அன்று சுவிஸ் புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழினவழிப்புச் சூத்திரதாரி மற்றும் இலங்கை தமிழினவழிப்பு அரசின் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குறே என்பவரை அழைத்து சுவிஸ் வாழ் தமிழ் மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்விற்கான முயற்சியொன்று இடம்பெற்று வருகின்றது.

இது சார்ந்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், அரசியல் தவிர்த்து இவ் இனவழிப்பாளி ஊடாக அபிவிருத்தி மற்றும் வர்த்தக ரீதியான உறவுகளைப் பேண விரும்புவோர் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் இத் துரோக நடவடிக்கையால் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் சவால்களும் எதிர் விளைவுகளும்:

  • வட மாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையையும், முதலமச்சரையும் சுதந்திரமாக இயங்கவிடாது தடுக்கும் இவ் ஆளுநரும் இவர் சார் தமிழினவழிப்பு சிறீலங்கா அரசும் மற்றும் இரண்டகர்களும், இனமான புலம்பெயர் மக்களை தேசியத்திலிருந்து திசை திருப்பும் முகமாக ஆளுனரூடாக பெயரளவிலான அபிவிருத்திகளை மேற்கொள்வதனூடாக மாகாணசபையை பலவீனப்படுத்தி வருகின்றனர்.
  • இவ் ஆளுநரின் கட்டளையின் கீழ் தமிழீழ நிலப்பரப்பெங்கும் பௌத்த விகாரைகளும், சிங்களக் குடியேற்றங்களுமென சிங்களமயமாக்கல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
  • இவரை அழைப்பதனூடாக புலம்பெயர் தமிழ் மக்கள், இக் கட்டமைப்புசார் தமிழினவழிப்பிற்கு பச்சைக்கொடி காட்டுவது போல் அமைகின்றது.

  • சிறீலங்கா அரசின் தமிழினவழிப்பிற்கு நீதிகேட்டு உலகத்தமிழினம் போராடி வரும் நிலையில் அனைத்து நீதி சார் விசாரணைப் பொறிமுறைகளையும் புறக்கணித்து வரும் இனவெறி சிறீலங்கா அரசபயங்கரவாதம், இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகள் ஊடாக புலம்பெயர் மக்களை மடைமாற்றி, புலம்பெயர் மக்கள் தனது நடவடிக்கைளுக்கு ஆதரவளிக்கின்றனர் என்கின்ற மாயவிம்பத்தை தோற்றுவிக்க முயல்கின்றது.

  • ஐ,நா விசாரணைப் பொறிமுறைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கடந்த 2 வருடமாக சர்வதேச நாடுகளை ஏமாற்றுவதற்காக பல கண்துடைப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதன் ஓர் அங்கமே இந்த சந்திப்பு முஸ்தீபுமாகும்.

  • இதனூடாக தமிழினவழிப்பு சார்ந்தும், அதற்கான சர்வதேச விசாரணை சார்ந்தும் வடமாகாண சபையின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு சர்வதேச நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்ட தீர்மானங்கள் வலுவிழக்கப்பட்டு, சிறீலங்காவில் முற்றான அமைதி நிலவும் விம்பம் காட்டப்படுகின்றது.

  • வடக்கிற்கு மாகாண சபை தேவையற்ற ஓர் விடயமெனும் வாதத்தை சர்வதேச அரங்கில் சிறீலங்கா சிங்கள அரசியல் வாதிகள் முன்வைக்கவுள்ள பின்னணியில் இக்கலந்துரையாடலை நடாத்துவதான முனைப்பு பலத்த சந்தேகங்களை உலகத்தமிழர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

  • ஒட்டுமொத்தமாக தமிழினவழிப்பை மூடிமறைக்கவும், தமிழர் உரிமைகளை அடியோடு இல்லாதொழித்து சர்வதேச அரங்கில் தமிழர் ஒற்றுமையை பலவீனப்படுத்தி தமிழீழ விடுதலைப்போராட்டத்தை விழுங்கும் நிகழ்ச்சி நிரலே இச்சந்திப்பாகும்.

நீதியற்ற தேசத்தில் அமைதி எவ்வாறு சாத்தியம்? அமைதியும் உரிமையுமற்ற தேசத்தில் அபிவிருத்தி எவ்வாறு சாத்தியம்? நாம் அபிவிருத்திக்காகப் போராடவில்லை, எமது மண்ணிலிருந்த மரபுரிமைக்காகவே போராடினோம். எமது உரிமைகள் எமக்கிருந்தால் எமது தேசத்தின் அபிவிருத்தியை நாமே அடைந்து கொள்வோம். இனவெறிச் சிங்கள ஆளுநரின் சூட்சும அபிவிருத்தி எமக்குத் தேவையில்லை.

இந் நாசகாரத் திட்டத்தின் பின்னணியில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஒரு சில நிர்வாகிகள் சிறீலங்கா அரசின் கைக்கூலிகளாகச் செயற்படுவது தமிழீழ தேசியத்தை நேசித்து பல வழிகளிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பங்காற்றிய ஒட்டுமொத்த புங்குடுதீவு மக்களையும் களங்கப்படுத்தியுள்ளது. இவ் விசக்கிருமிகளை தமிழீழ மக்கள் இனங்கண்டு சமூகத்திலிருந்து அகற்ற வேண்டும்.

2009வரை தேசியத்தின் விசுவாசிகள் கைகளில் இருந்த ஒன்றியம் அதன் பின் துரோகிகள் கைகளுக்கு மாறியிருப்பதே இப்படியான நாசகார நடவடிக்கைகள் நடைபெறுவதற்கு காரணம். இதை அமைப்பிலிருக்கும் சில நலன் விரும்பிகளும் கண்டும் காணாமல் இருப்பது வருத்தமடைய வைக்கின்றது.

அத்துடன் இத்திட்டத்திற்குத் துணைபோகும், வர்த்தக நிறுவனங்கள், சனசமூக அமைப்புக்கள், ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் அபிவிருத்தி நிறுவனங்கள் அனைத்தும் ஒட்டுமொத்த சுவிஸ் வாழ் சமூகத்தால் குறிப்பாக தேசியத்தை நேசிக்கும் புங்குடுதீவு மக்களால் புறக்கணிக்கப்படும் என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.

- தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
ஈழத்தமிழர் முன்னணி

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்