சுவிஸில் ‘அன்னை தெரசா’ அதிரடி கைது

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் ‘அன்னை தெரசா’ என பொதுமக்களால் அன்போடு அழைக்கப்படும் பெண் அரசியல்வாதி ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த லிசா போஸியா மிர்ரா(Lisa Bosia Mirra) என்ற 43 வயதான பெண் அரசியல்வாதி டிசினோ மாகாணத்தில் வசித்து வருகிறார்.

சுவிஸ் நாட்டில் புகலிடம் கோரி வரும் புலம்பெயர்ந்தவர்கள் மீது அளவற்ற அன்பு வைத்துள்ளது மட்டுமல்லாமல் Firdaus என்ற சங்கத்தை நடத்தி அதன் மூலம் புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவ நிதி திரட்டி வருகிறார்.

ஆதரவற்ற நிலையில் சுவிஸ் நாட்டிற்கு வரும் அகதிகளை இவர் அரவணைப்பதால் இவரை அந்நாட்டு மக்கள் ‘அன்னை தெரசா’ என அன்போடு அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் வேளையில் லிசா பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆப்பிரிக்காவில் இருந்து அகதி குழந்தைகளை சுவிஸ் நாட்டிற்கு சட்டவிரோதமாக அழைத்து வர உதவியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லிசாவிற்கு உதவியதாக வாகன ஓட்டுனர் ஒருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லிசாவை கைது செய்து விசாரணை செய்த பொலிசார் அவரை சில மணி நேரத்திற்கு பிறகு விடுதலை செய்தனர்.

எனினும், லிசா மீது விசாரணை தொடர்ந்து நடைபெறும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் நாட்டில் புகலிடம் கோரி வரும் சில நாடுகளின் குழந்தைகளை அந்நாட்டு அரசு நிராகரித்து திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கு சர்வதேச மன்னிப்பு சபையான அம்னாஸ்ட்டி கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments