இலங்கையில் 3 அமைப்புகளுக்கு நிரந்தர தடை விதித்தார் அதிபர் சிறிசேனா! எந்தெந்த அமைப்புகள் தெரியுமா?

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களின் காரணமாக மூன்று அமைப்புகளுக்கு அதிரடியாக தடை விதித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

ஈஸ்டர் தினமான கடந்த 21-ஆம் திகதியன்று இலங்கையில் இருக்கும் தேவாலயம் மற்றும் தனியார் விடுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலினான் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இலங்கையில் நடந்த இந்தக் கொடூரத் தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பும் பொறுப்பேற்றது.

அதுமட்டுமின்றி இலங்கை முழுவதும் ராணுவத்தினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சோதனையின்போது குண்டுவெடிப்புத் தாக்குதலில் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலால் நாட்டில் கொஞ்சம், கொஞ்சமாக சகஜநிலை திரும்பி கொண்டிருக்கும் நிலையில், இங்கிருக்கும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள், கடைகள் மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் அங்கு நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் இலங்கையில் வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக ராணுவம் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தும் என இலங்கை ராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேசிய தவ்ஹித் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லாதே இப்ராஹிம் (ஜே.எம்.ஐ), விலயாத் அஸ் ஜெய்லானி ஆகிய 3 அமைப்புகளையும் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்ட ஆணையை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்