இலங்கையில் ஒரே நாளில் உருவானதா ஐ.எஸ் அமைப்பு? சர்வதேச புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்கள்

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையின் கறுப்பு தினமாக கடந்த 21 ஆம் திகதி மாறியது. ஈஸ்டர் திருநாளில் கொழும்புவில் உள்ள புனித அந்தோணியர் ஆலயம், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் பச்சிளம் குழந்தைகளும் வயதான பெண்களும் உட்பட 253 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த நிலையில் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் இலங்கை ஐஎஸ் தொடர்பு குறித்து விசாரைணையை முடுக்கிவிட்டுள்ளன.

அதில் கிடைத்த தகவல்கள் மத அடிப்படைவாத தீவிரவாதத்தால் இலங்கை எப்படி குறிவைத்து தாக்கப்பட்டது என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 130க்கும் மேற்பட்டோரை இலங்கையின் பாதுகாப்பு அமைப்பினர், பொலிசார், சிறப்பு பிரிவினர் என்று பல்வேறு தரப்பினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இலங்கையின் விசாரணையில் ஸ்காட்லாண்ட் யார்டு, அமெரிக்காவின் எப்.பி.ஐ, இன்டர்போல் உள்ளிட்ட 6 நாடுகளின் அமைப்புகள் உதவி வருகின்றன.

அந்த அமைப்புகள் சார்பில் வெளியிடப்பட்ட புலனாய்வு தகவல்கள், இலங்கையில் ஐஎஸ் அமைப்பு காலூன்றியது பல ஆண்டுகளுக்கு முன்பே என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

சிரியாவில் ஐஎஸ் இயக்கம் வலுவாக இருந்தபோதே இலங்கை மக்களில் ஒரு பிரிவினர் அதில் இணைந்துள்ளனர்.

சிலர் நேரடியாக இலங்கையில் இருந்தும் சிலர் அவுஸ்திரேலியா, லண்டன் உள்பட பல்வேறு நாடுகளில் படிப்பு, வியாபாரம் நிமித்தமாக சென்றவர்கள் மீண்டும் இலங்கை திரும்பி ஐஎஸ் கட்டளைப்படி இந்த மனிதவெடிகுண்டு தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.

இந்த மனிதவெடிகுண்டுகள் பட்டதாரிகள் என்பதும், வர்த்தக ஜாம்பவான்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி ஐஎஸ் ஆதரவு அமைப்பின் பயிற்சி தளமாக கடந்த 2 ஆண்டுக்கு முன்பே மாற்றப்பட்ட லாக்டோவாட்டா பகுதியின் முக்கியத்துவத்தை, இலங்கை சிஐடி பொலிசார் உணரவில்லை என கூறப்படுகிறது.

இவர்களுக்கு பின்புலமாக இருந்தது இலங்கையின் நிழல் உலக தாதாவும் வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த மாகந்துரே மதூஷ் என்வர் என தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி மதூஷ் உள்ளூர் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி மற்றும் ஆயுத சப்ளை செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.

2018 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கையின் நிழல் உலக தாதா மாகந்துரே மதூஷ்க்கு ‘இன்டர்போல்’ சார்பில் ‘ப்ளூ’ நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இவன், சி-4 வெடிகுண்டுகள் (பிளாஸ்டிக் ஆடிஎக்ஸ் வெடிகுண்டுகள்) மற்றும் ஆயுதங்களை இலங்கையில் உள்ள ஐஎஸ் ஆதரவு குழுவுக்கு அனுப்பி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி இந்திய அரசின் புலனாய்வு அமைப்பான ‘ரிசர்ச் அண்ட் அனாலிசிங் விங்’ எனப்படும் ‘ரா’ இலங்கையில் செயல்படும் தீவிரவாத குழுக்கள் தொடர்பாக பல்வேறு உளவு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது.

இந்தியாவின் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கும் இலங்கையின் மாகந்துரே மதூஷ்க்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் ஆதார பூர்வமான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.

மேலும், இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை உருவாக்கிய முகமது ஜாஹ்ரன் ஹஷீம், காத்தான்குடி இஸ்லாமியக் கல்லூரியில் படித்தவன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, இவவர் தொடர்பில் புகார் அளிக்கப்பட்டதாகவும், யாருமே இதைக் கண்டுகொள்ளவில்லை என்கிறார் இலங்கை முஸ்லிம் கவுன்சிலின் துணைத் தலைவரான ஹில்மி அகமது.

தேசிய தவ்ஹீத் ஜமாத் வளர ஆரம்பித்தப் பிறகு, பல பகுதிகளில் புத்தர் சிலைகளின் முகங்கள் சிதைக்கப்பட்டன. இவ்விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஜாஹ்ரன், தெற்காசிய நாடுகளின் ஐஎஸ் அமைப்புக்கு முக்கிய பிரதிநிதியாக இருந்துள்ளான்.

அவனின் பெரும்பாலான வீடியோக்கள் இந்தியாவிலிருந்துதான் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பதும் அம்பலமாகியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...