உளவுத்துறையின் எச்சரிக்கையை கவனித்திருந்தால்... இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

Report Print Kabilan in இலங்கை

உளவுத்துறை எச்சரிக்கையை கவனித்து இருந்தால் குண்டு வெடிப்பை தடுத்து இருக்கலாம் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், 253 பேர் உயிரிழந்தனர். மேலும் 500 பேர் காயமடைந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு காரணம் ஐ.ஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தான் என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இந்தியா தகவல் தெரிவித்து இருந்தும், இலங்கை அரசு அதை அலட்சியப்படுத்தியதால் தான் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அளித்த பேட்டியில் கூறுகையில், ‘இலங்கை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் மீது இப்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். இந்த தாக்குதலை தடுக்காமல் விட்டதற்காக நாங்கள் பொறுப்பேற்று கொள்கிறோம். இலங்கையில் ஒருங்கிணைந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்பு விடயத்தில் பல விவகாரங்கள் இருக்கின்றன. தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுத்துறை மூலம் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

Mohd Rasfan/AFP/Getty Images

அந்த தகவலை அவர்கள் பொலிஸ் மற்றும் தடுப்பு குழுக்களுக்கு அனுப்பி இருக்க வேண்டும். எனக்கும் அது தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் இது தடுக்கப்பட்டு இருக்கும். இந்த விடயத்தை பொறுத்த வரை உரிய அமைப்புகள் ஏன் சரியாக செயல்படவில்லை என்பது தான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.

இது, பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்டது. இதில் என்ன நடந்தது? என்பது பற்றி விசாரிக்க ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்து இருக்கிறார். அதன் முடிவு வந்த பிறகு தான் எதையும் கூற முடியும். எனக்கு முன்கூட்டியே உளவுத்துறையிடம் இருந்து தகவல்கள் எதுவும் வரவில்லை. எனவே, முன்கூட்டியே விடயம் தெரியாததால் இதுபற்றி வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

தற்போது உளவுத்துறையினர் பல்வேறு தகவல்களை தந்து கொண்டு இருக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பு குறித்து நானும், ஜனாதிபதியும் மந்திரிசபை கூட்டம் மற்றும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து இருக்கிறோம். எனக்கும், ஜனாதிபதிக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் இது போன்று நடந்ததாக சொல்வதை ஏற்க முடியாது.

எனக்கு அவர்கள் தகவல் கொடுத்திருந்தால் நான் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பேன். எனக்கு இதில் முதன்மை பொறுப்பு உள்ளது. நான் நாட்டின் தலைவன். எனக்கு உரிய தகவல் வந்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்காது. எல்லா துறையும் இதில் ஒருங்கிணைந்து செயல்பட்டு இருந்தால் தாக்குதலை தவிர்த்து இருக்கலாம்.

அரசு மீது மக்கள் கோபத்தில் இருப்பதை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம். இந்த தாக்குதலுக்கு எங்கள் அரசு எந்திரம் சரியாக செயல்படாமல் இருந்ததுதான் காரணம் என்பதை ஒத்துக்கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...