இலங்கை தொடர் குண்டு வெடிப்பு காரணமாக வந்தது அதிரடி தடை... சொத்துக்கள் முடக்கம், கடுமையான நடவடிக்கை என அறிவிப்பு

Report Print Santhan in இலங்கை

இலங்கை படையினர் மேற்கொண்ட சோதனையின் போது நீர்கொழும்பு துணை மேயர் முஹம்மத் அன்ஸார் செய்னுல் பரீஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சில அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை அடுத்து நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் அதிரடி படையினர் மற்றும் பொலிசார் சுற்றிவளைத்ததில் நீர்கொழும்பு பிரதி நகராதிபதி முஹம்மத் அன்ஸார் செய்னுல் பரீஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவரது வீட்டிலிருந்து வாள் இரண்டும், மண்ணா கத்தி ஒன்றும், கூரிய ஆயுதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பரீஸ் என்பவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பின்னர் பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு அளித்து வந்தவர்.

மேலும் ட்ரான் கேமராக்களை வானில் செலுத்த வேண்டாம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், ட்ரான் கேமராவை வீடுகளுக்கு மேலே அனுப்பியதாக இந்தியர் ஒருவர் நீர்கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதே போல், அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று முன்தினம் இலங்கை பாதுகாப்பு படையினர் மீது நடத்திய துப்பாக்கி சூட்டிற்கான பொறுப்பினை ஐ.எஸ் தீவிரவாதிகள் ஏற்றுள்ள நிலையில், துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து 15 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தேசிய தௌகித் ஜமாத் மற்றும் ஜமேதுல் மில்லாது இப்ராஹிம் ஆகிய அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதிக்கு உள்ள அவசரகால நடைமுறைகளின் கீழான சிறப்பு அதிகாரத்தின் கீழ் இந்த அமைப்புக்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளன என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தடைசெய்யப்பட்ட இந்த அமைப்புக்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்துக் கொள்பவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளும் பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...