குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எந்த நாட்டுக்காரர்கள்? பட்டியலை வெளியிட்ட இலங்கை அரசு!

Report Print Kabilan in இலங்கை

இலங்கை குண்டுவெடிப்பில் பலியான வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குறித்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் கொழும்பில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், குண்டுவெடிப்பில் பலியானவர்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த பட்டியலை, இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் மொத்தம் 40 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 11 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 6 பேர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள், 3 பேர் டென்மார்க்கைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும் துருக்கியைச் சேர்ந்த இருவரும், ஜப்பான், நெதர்லாந்து, போர்ச்சுக்கல், சவுதி அரேபியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் குண்டுவெடிப்பில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்க-பிரித்தானியா இரட்டைக் குடியுரிமை பெற்ற 2 பேர், அவுஸ்திரேலியா-இலங்கை இரட்டைக் குடியுரிமை பெற்ற 2 பேர், சுவிஸ்-டச்சு இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவர், டச்சு-இலங்கை இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவர் ஆகியோரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த வெளிநாட்டவர்களில் இதுவரை 16 பேரின் சடலங்கள் அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்னும் 14 வெளிநாட்டவர் குறித்த விவரம் உறுதி செய்யப்படவில்லை என்றும், கொழும்பில் உள்ள சட்ட மருத்துவ அதிகாரி பணியகத்தில் சடலங்களாக வைக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாதவர்களில் இவர்களும் இருக்கலாம் என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...