கொழும்பில் புத்த மதத்தை சேர்ந்த தற்கொலை குண்டுதாரியா? லட்சக்கணக்கானோர் பார்வையிட்ட வீடியோவின் பின்னணி

Report Print Deepthi Deepthi in இலங்கை

கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பர்தா உடை அணிந்த புத்த மதத்தை சேர்ந்த ஒருவரை பொலிசார் கைது செய்ததாக வைரலான வீடியோ போலியானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

36 நொடிகள் நீடிக்கும் அந்த வீடியோவில், பர்தா அணிந்துள்ள நபர் ஒருவரை பொலிசார் விசாரிக்கின்றனர்.

கடந்த 48 மணிநேரத்தில் இந்த வீடியோவை பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளதுடன் இதை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.

ஆனால், இந்த வீடியோ தொடர்பான பின்னணி தகவல்களை ஆராய்ந்ததில் அது போலியானது என தெரியவந்துள்ளது.

2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ஆம் ஆண்டு 'நேத் நியூஸ்' எனும் இலங்கையை சேர்ந்த உள்ளூர் ஊடகம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அந்த செய்தித் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியின்படி, இலங்கை தலைநகர் கொழும்புவை அடுத்துள்ள ராஜ்கிரியா பகுதியில் விசாரிக்கப்படும் நபர் பர்தா அணிந்து மூன்று சக்கர வாகனத்தில் வந்ததாகவும், அவரை பார்த்து சந்தேகமடைந்த அதன் ஓட்டுநர், காவல்துறையினரிடம் தெரிவித்ததன் பேரில் இவர் கைது செய்யப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த 'எக்ஸ்பிரஸ் நியூஸ்' எனும் செய்தித் தளமும் அந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், 'நேத் நியூஸ்' செய்தி நிறுவனத்துக்கு சொந்தமான 'நேத் எப்எம்' எனும் பேஸ்புக் பக்கத்தில், இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது, ஆனால், இது 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 29ஆம் தேதி பதிப்பிக்கப்பட்ட வீடியோவாகும் என்று விளக்கம் அளித்துள்ளது.

இலங்கையில் புத்த மதத்தினருக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே சமீப காலமாக நிலவி வரும் பிரச்சனையால் இப்படி ஒரு தவறான வீடியோவை பகிர்ந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்