இலங்கையை உலுக்கிய தொடர் வெடிகுண்டு தாக்குதல்: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மூவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர்ச்சியாக வெடிகுண்டுகள் வெடித்தன.

இலங்கையை உலுக்கிய இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 310 என உயர்ந்துள்ளது.

500-க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் சுமார் 100 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இலங்கையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தெற்கு ஆசிய நாடுகள் இதுவரை சந்தித்திராத மிக கொடூரமான பயங்கர தாக்குதல் என கூறப்படுகிறது.

இவ்வாறான ஒரு தாக்குதல் நடைபெற போவதாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் முன்னரே இலங்கையை எச்சரித்து இருந்தன.

ஆனால் பொலிஸ் உயர் அதிகாரிகளும் உளவுத் துறை தகவல்களை மிக அலட்சியமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

தொடர் குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்ட 30 பேரை இலங்கை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தீவிர உறுப்பினர் ஆவார்கள்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சர்வதேச அளவில் சதிவலை பின்னப்பட்டு இந்த தாக்குதல் நடந்து இருப்பதாக தகவல் வெளீயாகியுள்ளது.

நியூசிலாந்து நாட்டில் கடந்த மார்ச் மாதம் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் நடத்தியதாக கருதப்படுகிறது.

மட்டுமின்றி, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவு டெலிகிராம் சேனல் ஒன்றில் மூன்று தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் படம் வெளியிடப்பட்டது.

அந்த படங்களில் அபு உபைதா, அப்துல்பாரா, அப்துல் முக்தர் ஆகிய 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளனர்.

அவர்கள் ஐ.எஸ். கொடிகளை பிடித்தப்படி நிற்கிறார்கள். இவர்கள் மூவரும் கொழும்பில் தாக்குதல் நடத்திய தற்கொலை படையில் இடம் பெற்று இருந்தவர்கள் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஞாயிற்றுக் கிழமை நடந்த 8 குண்டு வெடிப்புகளில் 7 இடங்களில் மனித வெடிகுண்டு மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த 7 தற்கொலை பயங்கரவாதிகளும் கடந்த 3 மாதங்களாக கொழும்பில் தங்கி இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தற்கொலை தாக்குதலுக்கு வெளிநாட்டிலும், கொழும்பு புறநகரிலும் பயிற்சி பெற்றதாக தெரிய வந்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டுள்ள விதம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்வதாக உள்ளது.

இதனிடையே, இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பும் உதவிகள் செய்து இருப்பதாக இந்தியா கூறி உள்ளது.

இது தொடர்பாக இந்தியா சார்பில் இலங்கைக்கு பல்வேறு ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதல் மூலம் இலங்கையில் காலூன்ற லஷ்கர் இ தொய்பா இயக்கம் தீவிரமாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதை தொடக்கத்திலேயே கிள்ளி எறியும்படி பல்வேறு சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்