தாக்குதலுக்கு முன் கடைசியாக சிரித்து விளையாடிய தமிழ்க் குழந்தைகள்: நெஞ்சை உருக்கும் படங்கள்!

Report Print Vijay Amburore in இலங்கை

மட்டக்களப்பு பகுதியில் தாக்குதலுக்கு முன் குழந்தைகள் அனைவரும் ஓடி விளையாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அடுத்தடுத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட கோரமான வெடிகுண்டு தாக்குதலில் 290 பேர் பலியானதோடு, 500க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு பகுதியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன், சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் குழந்தைகள் என கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள சீயோன் சர்ச்சின் போதகர் திரு குமரன், எங்கள் சபைக்கு வெளியில் நின்றுகொண்டிருந்த ஒரு புதிய மனிதனைக் கண்டேன். அவர் நம் சபைக்கு வழக்கமாக வருபவராக இருக்கவில்லை.

அவர் சுமார் 35 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். பெயர் ஒமர் என்றும், ஓட்டமாவடியில் இருந்து எங்களுடைய தேவாலயத்தை காண வந்திருப்பதாக கூறினார்.

பின்னர் எப்பொழுது ஈஸ்டர் திருப்பலி ஆரம்பமாகும் என என்னிடம் கேட்டார். நான் ஆலயத்திற்குள் வருமாறு அவரை அழைத்தேன்.

எங்களுடைய ஆலயத்திற்கு மற்ற மதங்களை சேர்ந்த நபர்களும் வருவதாலேயே அவரை நான் உள்ளே அழைத்தேன். ஆனால் அந்த நபர் உள்ளே வர மறுத்துவிட்டார். நண்பன் ஒருவனை சந்திக்க வந்திருப்பதாகவும், அவரை பார்த்துவிட்டு கிளம்பிவிடுவேன் எனவும் கூறினார்.

அவருடைய கைகளில் இரண்டு பெரிய பைகள் இருந்தன. அவர் ஆலயத்திற்குள் வர மறுத்ததும், நான் உள்ளே சென்று ஜெபத்தை ஆரம்பித்தேன்.

காலை 9 மணிக்கு திருப்பலி ஆரம்பித்த அடுத்த சில நிமிடங்களில் வெடிகுண்டு சத்தத்தை கேட்டேன். ஆலயம் முழுவதும் ரத்தம் படிந்திருந்தது. எல்லா பகுதிகளிலும் குழந்தைகளின் உடல்கள் பரவி கிடந்தன.

எங்கள் தேவாலயத்தில் நிறைய சிறிய குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர் என்னுடன் வர மறுத்தபோது, தேவாலயத்தின் மற்ற உறுப்பினர்கள் அவரை வெளியேற்றி முற்றத்திற்கு அழைத்து சென்றார்கள்.

அங்கு அவர்களுக்குள் வாதம் நடந்ததா? இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் வெடிகுண்டு வெடித்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்