50 நாட்கள் சாப்பிட கூட வழியில்லாமல் பட்டினி கிடந்த இலங்கை அகதி பெண்: வாட்ஸ் ஆப்பில் வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in இலங்கை

தமிழ்நாட்டில் உள்ள மண்படம் அகதி முகாமில் பெண் ஒருவர் 50 நாட்கள் சரியாக உணவு கிடைக்காமல் பட்டினியாக இருந்துள்ளார்.

இலங்கையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஷோபனா என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அகதியாக தனது கணவருடன் இந்தியாவுக்கு வந்துள்ளார்.

இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்ற போது கடலோரக் பாதுகாப்பு குழும பொலிசார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதன் பின் ஷோபனாவை மண்டபம் அகதிகள் முகாமிலும், அவரது கணவரை திருச்சியில் உள்ள முகாமிலும் ஒப்படைத்துள்ளனர்.

முகாமில் தங்கவைக்கப்பட்ட இவர்களுக்கு தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அகதிகளுக்கு மாதம் தோறும் வழங்கப்பட்டு வந்த உதவி தொகையான ரூ.1500, தினசரி வழங்கப்பட்டு வந்த உணவுப்படி ரூ.100 நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் ஷோபனா சாப்பிடக்கூட வழியில்லாமல் இருந்து வந்துள்ளார். தொடர்ந்து 50 நாட்களாக இதே நிலை தொடர்ந்துள்ள நிலையில் பாதுகாப்புக்கு இருந்த காவலர்களின் உதவியால் ஷோபனா அவ்வப்போது பசியாறி வந்துள்ளார்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழிக்கு வாட்ஸ் அப் மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து முதனமை நீதிபதி கயல்விழி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும்,சார்பு நீதிமன்ற நீதிபதியுமான ராமலிங்கம் ஆகிய இருவரும் திடீரென மண்டபம் அகதிகள் முகாமிற்கு நேரில் செய்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பின்னர் தினசரி வழங்கப்பட வேண்டிய உணவுப்படி ரூ.100 ஷோபனாவிற்கு தொடர்ந்து வழங்குமாறு மண்டபம் அகதிகள் முகாம் தனித்துணை ஆட்சியரை கேட்டுக் கொண்டார்.

மேலும், இப்பெண் மீதான வழக்கு விசாரணை வருகிற 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers