மஹா சிவராத்திரி அன்று எப்படி விரதம் இருக்க வேண்டும்?

Report Print Kavitha in ஆன்மீகம்

மஹா சிவராத்திரி சிவனை பூசிப்பதற்கு சிறந்த நாளாக கருதப்படுகின்றது.

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி என கொண்டாடப்படுகிறது.

சிவபெருமானுக்காக மஹா சிவராத்திரி அன்று விரதம் இருப்பது பல புண்ணியங்களை நமக்கு பெற்று தரும்.

சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

  • காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும்.
  • நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும்.
  • மாலையில் தரிசிக்க - பாவம் அகலும்
  • அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.
சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள், சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.

சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும்.

இதைத்தொடர்ந்து, சிவன் கோயிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும்.

வீட்டிலேயே இதை மேற்கொள்ளலாம். அருகில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டும் வழிபடலாம்.

பூஜையின் போது சிவாய நம என்ற மந்திரத்தை உச்சரிப்பது மனோ சக்தியை கொடுக்கும். பூஜையின் போது, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகச் சிறந்த பலனை தரும்.

அன்றைய தினம் இரவில் உறங்காமல், நான்கு வேளையும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, சிவனை வழிபட்டு, ஏழை-எளியவர்களுக்கு தங்களால் முடிந்த தானத்தை வழங்கி, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாமப்பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடைப்பிடிப்பது, நூறு அசுவமேதயாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பதற்கு ஈடாகாது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்