கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

Report Print Akkash in ஆன்மீகம்

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம்.

இந்த விரதத்தை மனதில் கொண்டே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள்.

சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.

கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும். கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.

அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.

விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும்.

ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது. கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி.

நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.

அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும். கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறப்படுகிறது

வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள். கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும்.

நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை. சஷ்டி ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும்.

பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வன் புராண முடிப்பு’ என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.

மேலும் குமர குருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்த புராணத்தின் சாரமாகும். பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு.

ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம். முருகனுக்காக வெள்ளிக் கிழமை விரதம் இருப்பவர்கள், அதை ஐப்பசி மாத முதல் வெள்ளிக் கிழமையன்று தொடங்குவது சிறப்பு. அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும். வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும்.

இரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம். சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.

குழந்தை வரம் தரும் கந்த சஷ்டி விரதம்முருகனுக்குரிய விரதங்களில் இதுவே தலைமையானது. ஒப்பற்றது.

இதனைச் சுப்பிரமணிய சஷ்டி விரதம் என்றும் அழைப்பர்- இது திதி விரதம். `சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தான்’ என்று வேடிக்கையாகக் கூறுவார்கள். முருகன் சட்டியிலே மாவை வறுத்தானாம் உண்மைதான்.

அவன் சட்டியிலே, சஷ்டி திதியிலே, மா அறுத்தான் = மாமரமாக நின்ற சூரபத்மனைத் அறுத்தான். முருகன் சூரபத்மனுடன் ஆறு நாள்கள் தொடர்நது போரிட்டான். ஆறாம் நாள், மாமரமாகி எதிர்த்துப் போரிட்ட அவனைத் தனது வேலாயுதத்தால் பிளந்தான்.

பிளந்த ஒரு கூறு மயிலாயிற்று. முருகன் அதைத் தன் வாகனமாக ஏற்றான். மறு கூறு சேவலாயிற்று. அதைத் தன் கொடியாக ஏந்தினான்.

ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள், அதாவது தீபாவளிக்கு மறுநாள்- பிரதமையில் விரதத்தைத் தொடங்கித் தொடர்ந்து சஷ்டி வரை ஆறுநாள்கள் முருகனை வழிபட்டுக் கடும் விரதம் காப்பது கந்த சஷ்டி விரதம்.

இதனை `மகா சஷ்டி விரதம்’ என்றும் கூறுவர்.வழிபாடு: ஆறு நாள்களிலும், காலையில் நீராடி, ஆறு காலங்களிலும், ஆறுமுகனுக்குப் பூஜைகள் செய்ய வேண்டும். கோவில்களுக்குச் சென்று முருகனை வழிபட வேண்டும்.

கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் முதலான கவச நூல்களைப் பயிலலாம். திருப்புகழ், கலந்தரலங்காரம், கந்தரநுபூதி முதலிய நூல்களை ஓதலாம். `சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்பது ஒரு மொழி. சட்டியில் = சஷ்டி திதியில், இருந்தால் = விரதமிருந்தால்; அகப்பையில் = கருப்பையில்; வரும் = கரு தோன்றும். அதாவது மகப்பேறில்லாத மகளிர் சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபட்டால், அவனது அருளால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும் என்பது கருத்து.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments