கனடாவில் தமிழர் பெருமையைப் பறைசாற்றும் தமிழர் தெருவிழா

Report Print Dias Dias in சிறப்பு

கனடியத் தமிழர் பேரவையினரால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் 'தமிழர் தெருவிழா'வில் இவ்வாண்டு சுமார் இரண்டரை இலட்சம் மக்கள் வரை கலந்து கொண்டிருக்கிறார்கள் என அறிய வருகிறது.

தமிழர்கள் வாழும் நாடுகளில் நடத்தப்படும் தமிழ் விழாக்களில் குறிப்பிடத்தக்கதாகக் காணப்படும் 'தமிழர் தெருவிழா' இவ்வாண்டு 5வது முறையாக கடந்த சனி, ஞாயிறு (2019 ஆகஸ்ட் 24, 25) மார்க்கம் வீதியில் கோலாகலமாக நடைபெற்றது.

தமிழர் தெருவிழாவினை இவ்வாண்டும் ரொறன்ரோ மேயர் ஜோன் ரோறி உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். கனடிய தமிழர் பேரவையின் தலைவரான சிவன் இளங்கோ அவரவேற்புரை நிகழ்த்தினார்.

ஒன்ராறியோ மாகாண நிதியமைச்சர் ரொட் பிலிப்ஸ் அவர்களுடன் போக்குவரத்து அமைச்சர் கரோலின் மல்ரோனி அவர்களும் ஒன்ராறியோ மாகாண அரச பிரதிநிதிகளாக விழாவிற்கு வந்து சிறப்பித்தனர்.

மேலும், கனடாவின் மத்திய ஒன்ராறியோ மாநில அரசாங்கப் பிரதிநிதிகளும் லிபரல், கொன்சவேடிவ், என்டிபி உட்பட பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும் சமூகத் தொண்டர்களும் வருகை தந்து தமிழ் மக்களுடன் இணைந்து தமிழர் தெருவிழாவினை உற்சாகமாகக் கொண்டாடியதும் காணக்கூடியதாக இருந்தது.

விழா நடைபெற்ற வீதிப்பகுதி இரு தினங்களும் போக்குவரத்திற்கு முழுமையாக மூடப்பட்டு தமிழர் பெருமையைப் பறைசாற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் திறந்த வெளியில் அரங்கேறின.

குறிப்பாக விதவிதமான உணவு வகைகள், பழவகைகள், குளிர்பண்டங்கள் ஒருபுறமாகவும் மயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள், வர்த்தக அங்காடிகள், சிறுவர்க்கான பொழுதுபோக்கு நிகழ்வுகள் என்பன மறுபுறமாகவும் கிட்டி தமிழ்மக்களை மட்டுமல்லாது கனடாவின் பிற இனத்தவர்களையும் மகிழ்வூட்டிக் கொண்டிருந்தன.

பல்கலாச்சார நிகழ்வு நேரத்தின்போது எகிப்து, மெக்சிகோ, கொரியா, சீனா நாட்டுக் கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகளைத் தந்து பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தனர்.

இருதினங்களும் கனடாவின் தமிழ் கலைஞர்களுடன் இலங்கை இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களுமாக சுமார் நானூறுக்கும் மேற்பட்ட மேடைக் கலைஞர்கள் தெருவிழாவினைச் சிறப்பித்தனர்.

கனடாவின் பாடகர்களான சின்மயி, நவ்47 மற்றும் தீபிகா மகாதேவனுடன் இன்னும் பலரும் வண்ணமயமாக ஒளிர்ந்த மேடையில் தோன்றி பாடல்களைப் பாடி மெய்மறக்கச் செய்தனர்.

இவர்களுடன் தமிழகத்திலிருந்து வருகை தந்த சுப்பர்சிங்கர் பாடகர் திவாகர், வி.எம். மகாலிங்கம் ஆகிய இருவரும் சிறப்புப் பாடகர்களாகக் கலந்து கொண்டனர்.

மேலும் முதன்முறையாக தாயகத்திலிருந்தும் ஒரு பாடகர் தெருவிழாவில் பாடுவதற்கு இம்முறை அழைக்கப்பட்டிருந்தார். வவுனியாவிலிருந்து வருகை தந்த இளம் பாடகர் ஜெயந்தன் கந்தப்பு துள்ளிசையாக பாடல்களைப் பாடி அனைவரையும் கவர்ந்தார்.

பாடல்களுக்கு மெகா ரியூனேர்ஸ், அக்னி இசைக்குழுக்கள் பின்னணி இசை வழங்கின. இவ்வாண்டிற்கான விழாவில் சிறப்புறக் குறிப்பிடத்தக்க விதமாக பல நிகழ்வுகள் அமைந்திருந்திருந்தமையும் கவனிக்கத்தக்கது.

கி.மு. 4ம் நூற்றாண்டிலிருந்து இன்றைய காலகட்டம்வரை தமிழர் வரலாற்றின் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களின் தொகுப்பாக அமைந்த கண்காட்சி அதனைக் காணவந்த பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தது.

யுத்த காலத்தின்போது ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கணிக்கும் விபரத் தொகுப்பு ஒன்றைப் பூரணப்படுத்தும் விபரச் சேகரிப்பு நிலையமும் தெருவிழாவின்போது ஏராளமான பார்வையாளர்களைப் பங்காளர்களாக்கியது.

"படுகொலை செய்யப்பட்டவர்களைக் கணக்கெடுத்தல்” 'Counting the Death' என்ற தலைப்பிலான விபரச் சேகரிப்புத் திட்டத்தை அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் HRDAG என்ற மனித உரிமைகள் அமைப்பு தெருவிழாவிற்கு வந்து நடத்தியிருந்தது.

ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்கும் திட்டத்தைப் பிரபலப்படுத்தும் வகையில் அமைந்த அலங்கார வண்டி ஊர்வலமும், கண்காட்சியும் தமிழ் ஆர்வலர்களைப் பரவசப்படுத்தியது.

இளைய தலைமுறையினருக்காக பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதையொட்டி அதே இளைய தலைமுறையினருக்காக பல்வேறு போட்டிகளும் தெருவிழாவின்போது நடத்தப்பட்டு ஊக்கமளிக்கப்பட்டது.

உலகளாவிய நிலையில் வாழும் பல்வேறு தமிழ்க் கல்விமான்களும் தமிழ் ஆர்வலர்களும் இவ்வகைக் கண்காட்சிகள் குறித்தும் தெருவிழா பற்றியும் தமது பலத்த பாராட்டுக்களை விழா அமைப்பாளர்களான கனடியத் தமிழர் பேரவைக்கு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்