பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார்! வேதனையுடன் வீடியோ வெளியிட்ட கல்லூரி மாணவி

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் முன்னாள் அமைச்சர் பல பெண்களின் வாழ்க்கையை அழித்துள்ளதாக மறைமுகமாக பேசிய வீடியோ வெளியான அடுத்த நாளே அவர் காணாமல் போயுள்ளதால், பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

உத்திரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ். சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் சேர்மேனாக இருப்பவர் சுவாமி சின்மயானந்த்.

இவர் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சராகவும் இருந்தவர்.

இந்நிலையில் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டியிருந்தார்.

அதில், நான் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் இருந்து வருகிறேன். எஸ்.எஸ் கல்லூரியில் சட்டப் படிப்பு படித்து வருகிறேன்.

இங்கு புனிதமான சமூகத்தை சேர்ந்த ஒருவர் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். அவர் தற்போது என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர்தான் எனக்கு உதவ வேண்டும். அவர் என் குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்.

என்ன நடக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். பிரதமர் மோடி, தயவுசெய்து எனக்கு உதவுங்கள். இதைச் செய்பவர் ஒரு சந்நியாசி. அவர், பொலிஸ், மாவட்ட நீதிபதி உள்ளிட்ட பலரும் எனக்குப் பழக்கம். அவர்கள் அனைவரும் எனக்காகத்தான் நிற்பார்கள். அவர்கள் யாரும் எனக்கு எதிராகச் செயல்பட மாட்டார்கள் என்று மிரட்டுவதாக கூறியிருந்தார்.

இந்த வீடியோ 23-ஆம் திகதி வெளியாக, அவர் 24-ஆம் திகதி முதல் காணவில்லை. இதனால் மகள் காணவில்லை என்று பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் மகள் காணமல் போனதற்கு முக்கிய காரணம் சுவாமி சின்மயானந்த் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகள் கடைசியாக ரக்‌ஷா பந்தன் அன்று தான் வீட்டிற்கு வந்தார். அவ்வப்போது அவளுடைய போன் ஆப்பில் இருக்கும், இது குறித்து சரியாக பதில் அளிக்காமல் இருந்தாள்.

அப்போது அவள் ஒரு முறை என் போன் அதிக நேரம் சுவிட் ஆப்பில் இருந்தால், நான் ஏதோ ஆபத்தில் இருக்கிறேன் என்பது மட்டும் உண்மை என்று கூறினாள், இப்போது பார்த்தால் பயமாக இருக்கிறது, அவள் தனிப்பட்ட பிரச்னை குறித்து எதுவும் கூறியதில்லை.

காவல்நிலையத்தில் புகார் அளித்தும், இது குறித்து பொலிசார் சின்மயானந்த் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனையடைந்தனர்.

பொலிசார் கூறுகையில், மாணவியின் வீடியோவை பார்த்தோம், அதில் அவர் சின்மயானந்த்தை நேரடியாக குறிப்பிடாததால், காணமல் போன வழக்காக விசாரித்தோம், இப்போது மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளதால், சின்மயானந்த் மீது ஆள் கடத்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறினர்.

கடத்தல் வழக்கு குறித்து சின்மயானந்த் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்ட போது, இதில் என் கட்சிக்காரர் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை.

கடந்த 22-ஆம் திகதி ஒரு மெசேஜ் வருகிறது. அதில் உங்கள் நற்பெயரை தரைமட்டமாக்கும் வீடியோ ஒன்று என்னிடம் இருக்கிறது. அதை வெளியிடக் கூடாது என்றால் 5 கோடி ரூபாய் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பற்றியும் பொலிசார் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு சின்மயானந்த் ஆசிரமத்தில் நீண்டகாலமாகத் தங்கியிருந்த பெண் ஒருவர், அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுத்தார். அதில் அவர், என்னை நீண்டகாலமாக அடைத்து வைத்ததுடன் தன்னைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு 2018-ம் ஆண்டில் அரசு தரப்பிலிருந்து திரும்பபெறப்படுவதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers