கறுப்புப் பட்டியலில் இணைப்போம்.. பாகிஸ்தானுக்கு இறுதிகட்ட எச்சரிக்கை!

Report Print Kabilan in தெற்காசியா

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை தடுக்கும் நடவடிக்கைகளை, அக்டோபர் மாதத்திற்குள் பாகிஸ்தான் தீவிரமாக பின்பற்றாவிட்டால், கறுப்புப் பட்டியலில் இணைப்போம் என்று சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் நாடு நிதி நெருக்கடியை சமாளிக்க, சர்வதேச நிறுவனங்களிடம் முயற்சித்து வருகிறது. ஆனால், பயங்கரவாதத்தை வளர்க்கும் விதமாக பாகிஸ்தான் அரசு பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை தடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச நாடுகளிடம் இதனை கூறிவந்தன. அதனைத் தொடர்ந்து, பாரிஸில் உள்ள சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு(FATF), பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும் என்று கண்டித்தது.

அவ்வாறு தடுக்காவிட்டால் பாகிஸ்தான் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் இந்த இலக்கை பாகிஸ்தான் தவற விட்டதைத் தொடர்ந்து, இந்தியா அளித்த தகவல்களின் அடிப்படையில் பிப்ரவரி மாதத்தில் Grey பட்டியில் பாகிஸ்தானை வைத்தது FATF.

இந்நிலையில், FATF அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை தடுப்பதில் பாகிஸ்தான் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தோம்.

அந்த உடன்படிக்கையின்படி வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேற்கண்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த தவறினால், பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் இணைப்பது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

கடந்த ஜனவரி மற்றும் மே என இரண்டு முறை பாகிஸ்தான் இந்த இலக்கை தவறவிட்ட நிலையில், இறுதியாக அக்டோபர் மாதத்திற்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இறுதி கெடு விதிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டால் உலக வங்கி, சர்வதேச நிதியம், ஐரோப்பிய வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி அமைப்புகளிடம் இருந்து நிதி பெருவதில் பெரும் சிக்கல் ஏற்படலாம்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்