மும்பை பயங்கரவாத தாக்குதலை விஞ்சிய இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்!

Report Print Kabilan in தெற்காசியா

இந்தியாவின் மும்பை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை விட பெரிய பயங்கரவாத தாக்குதல் இலங்கை குண்டுவெடிப்பு தான் என்று கூறப்படுகிறது.

கடந்த 1993ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் திகதி, இந்தியாவின் மும்பை நகரில் உள்ல 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. குறிப்பாக மும்பை பங்குச்சந்தை வர்த்தக மையத்தின் கட்டடம், ஏர் இந்தியா கட்டடம், பிலாசா திரையரங்கம், சென்சுரி பஜார் ஆகிய முக்கிய பகுதிகள் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு உள்ளாகின.

மேலும் பல இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தக் கோர சம்பவத்தில் சுமார் 257 பேர் பலியாகினர். அத்துடன் 1,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தியாவில் முதல் முறையாக ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் இந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டதாக தெரிய வந்தது.

இதனால் உலகளவில் இச்சம்பவம் கடும் கண்டனத்திற்கு உள்ளானதுடன், மிகவும் கோரமான சம்பவமாகவும் அமைந்தது. இந்தத் தாக்குதல் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் யாகுப் மேனன் கடந்த 2015ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

இந்நிலையில், இலங்கையில் ஈஸ்டர் நாளான நேற்று செயிண்ட் ஆண்டனி தேவாலயத்தில் முதல் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பிறகு சில நிமிடங்களில் ஷாங்கிரி ஹொட்டல், தேவாலயங்கள் என 6 இடங்களில் குண்டுவெடிப்பு நடந்தது. பின்னர் மேலும் இரண்டு இடங்களிலும் குண்டுவெடித்தது.

இதுவரை இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 290 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 36க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்த குண்டுவெடிப்பில் பலியாகியுள்ளனர். ஆனால் இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதன் காரணமாக மும்பை தொடர் தாக்குதலை விட, இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் மிகவும் பயங்கரமானதாக கருதப்படுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்