தமிழக அரசியலில் பெரிய சக்தியாக உருவாகப்போவது யார்? உலக தமிழர்களின் கேள்வி இது

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

தமிழக அரசியல் வரலாற்றில் ஒலித்து ஓய்ந்துவிட்டது இரண்டு கம்பீர குரல்கள்.

#ஜெ. #ஜெயலலிதா #என்னும் #நான்.. #உயிரினும் #மேலான #கழக #உடன் #பிறப்புகளே. இவ்வாறான இரு துருவங்கள், தழிழக வரலாற்றில் இனி இல்லை.

தமிழகத்தில் திராவிட கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

மொழி, இன உரிமைகள், பகுத்தறிவு ஆகிய நோக்கங்களுடன் 1944இல் பெரியார் தலைமையில் தொடங்கப்பட்ட திராவிடர் கழகமும், 1949இல் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகமும்- மொழி, கலை, நாடகம், இலக்கியம், திரைப்படம் என அனைத்துத் துறைகளிலும் பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டதை யார் மறுக்கமுடியும்?

1920-ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. 1920 இல் இருந்து 1967 வரை தமிழ்நாட்டின் முதல்வர் பதவியை அதிக முறை ஆக்கிரமித்து கொண்டது காங்கிரஸ் எனும் தேசிய கட்சி.

1957இல் சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்டு களம் கண்டது திமுக. 1967இல் காங்கிரசை வீழ்த்தி ஆட்சி அமைத்தார் அண்ணா. 1967 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியால் இன்று வரை மேலே எழும்ப முடியவில்லை.

1967 இல் இருந்து 1977 வரை தமிழகத்தில் ஆட்சி செய்து வந்தது திமுக. திமுக கட்சியில் இருந்த எம்ஜிஆர் அக்கட்சியில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக , அங்கிருந்து தனியாக பிரிந்து சென்று அதிமுக எனும் கட்சியை தொடங்கி 1977 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தமிழக முதல்வரானார்.

1967 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை தமிழக அரசியலில் அசைக்க முடியாத பெரிய சக்தியாக இருக்கிறது திமுக மற்றும் அதிமுக கட்சிகள்.

கருணாநிதியும் - எம்ஜிஆரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும், தமிழக அரசியலில் இருவரும் பரம எதிரிகளாக இருந்தனர். அவ்வாறே மக்களால் கருதப்பட்டனர். இருகட்சிகளும் மாறி மாறி தமிழகத்தில் ஆட்சி செய்து வந்தன.

அதிமுக தலைவராக இருந்த எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியில் சில பிரச்சனைகள் நடந்தாலும் அதனை தாங்கிபிடித்து அக்கட்சியை தனது கட்டுக்குள் கொண்டு வந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எனும் பதவியை பிடித்தார் ஜெயலலிதா. எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு கட்சி ஜெயலலிதாவின் கட்டுக்குள் முழுமையாக வந்து தமிழகத்தில் முதல்வராகவும் பதவி வகித்தார்.

கருணாநிதி - எம்ஜிஆர் பரம எதிரிகள் என்று கூறப்பட்டு வந்த காலம் மாறி கருணாநிதி - ஜெயலிலிதா ஆகிய இருவரும் பரம எதிரிகள் என தமிழக அரசியலில் அறியப்பட்டது.

அந்த அளவுக்கு எம்ஜிஆருடன் அசியலில் நடத்திய போட்டியை, ஜெயலலிதாவுடனும் நடத்தினார் கருணாநிதி, ஒரு முறை பேட்டியின் போது ஜெயலலிதாவிடம், கருணாநிதிக்கு பிறகு உங்களது அரசியல் பற்றி என்ற கேள்விக்கு, சிரித்துக்கொண்டே ஒதுங்கிவிடுவேன் என தெரிவித்தார்

கருணாநிதிக்கு பிறகு அரசியலில் யாரை தகுதியான எதிரியாக நினைத்து அரசியல் செய்ய முடியும் என கூறினார் ஜெயலலிதா. அந்த அளவுக்கு இரு தலைவர்களும் ஓருவரையொருவர் மிகுந்த பலம் வாய்ந்தவர்களாக கணித்து வைத்துக்கொண்டனர்.

இவர்கள் மட்டுமின்றி, தமிழக மக்கள் மனதிலும் இன்றுவரை அசைக்க முடியாத இரு கட்சிகளாக இருப்பது திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தான்.

இந்த இரு கட்சிகளுக்கும் மாற்று கட்சியாக 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விஜயகாந்தின் தேமுதிக கட்சி வரும் என கணிக்கப்பட்ட நிலையில், அது தவிடுபொடியானது. கட்சிகளின் பெயர்களையும் தாண்டி கருணாநிதி - ஜெயலலிதா எனும் இரு தலைவர்களின் பெயர்களே தமிழக மக்களின் மனதில் பசுமரத்தாணி போன்று பதிந்துள்ளது.

தமிழத்தில் இதர கட்சிகள் இருந்தாலும், மக்கள் செல்வாக்கு மற்றும் மக்களால் அதிகம் அறியப்பட்ட கட்சிகளாக இந்த இரு கட்சிகளும் இருந்து வந்த நிலையில்,2016 ஆம் ஆண்டு அதிமுகவின் அச்சாணியாக இருந்த ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு, இனி அதிமுகவின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்தது.

தற்போது, திமுகவின் அச்சாணியாக இருந்த கருணாநிதியின் மறைந்துவிட்டதால், திமுகவின் எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கு பதிலாக, இனி தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவாகப்போவது யார் என்ற கேள்வி தான் எழுந்துள்ளது.

திமுகவில் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் செயல் தலைவராக இருந்ததுவந்தாலும், கருணாநிதி எட்டிய தூரத்தை அவர் இன்னும் எட்டவில்லை, அதுமட்டுமின்றி தேர்தல் களத்தில் தனது தந்தைக்கு இருக்கும் காய்நகர்த்தும் தந்திரம் ஸ்டாலினுக்கு இல்லை என்று கூறப்படுகிறது, மேலும், திமுகவில் குடும்ப அரசியல் வேறு தலைதூக்கி அவர்களுக்குள்ளேயே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன.

இந்த இரு துருவங்களும் மறைந்துவிட்டதால், மக்கள் புதிய தலைவரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழக அரசியலில் தற்போது வெற்றிடம் உள்ள நிலையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் அரசியல் வருகை, தமிழகத்தை பிடிக்க பாஜக மேற்கொள்ளும் தந்திரங்கள் என அனைத்தும் இணைந்து இனி தமிழகத்தை ஆளப்போவது யார் என்ற கேள்வி தற்போதே தமிழக மக்களின் மனதில் எழ ஆரம்பித்துவிட்டன.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்