திருமணம் செய்துவிட்டு ஏமாற்றும் வெளிநாட்டு வாழ் கணவர்களுக்கு எச்சரிக்கை தகவல்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

இந்திய பெண்களை திருமணம் செய்து விட்டு மாயமாகும் வெளிநாட்டு வாழ் கணவர்களுக்கு சம்மன் அனுப்ப தனி வெப்சைட் தொடங்கவிருக்கிறது.

வெளிநாட்டு வாழ் இந்திய கணவர்கள் தங்களை கைவிட்டு விட்டதாகவும், திருமணத்துக்குப்பின் மனரீதியாக மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3,328 பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

இதுபோன்ற மோசடி திருமணங்களை தடுப்பதற்காக, வெளியுறவுத்துறை அமைச்சகம் தனி வெப்சைட் ஒன்றை உருவாக்கி வருகிறது. இதன்மூலம், தலைமறைவாகும் வெளிநாட்டு வாழ் கணவன்களுக்கு சம்மன், வாரன்ட் பிறப்பிக்கப்படும்.

இதற்கு பதில் அளிக்காவிட்டால், அவர் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்படுவார். அவரது சொத்துக்கள் முடக்கப்படும். இதுபோன்ற வெப்சைட் உருவாக்குவதற்கு குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

இதன் மூலம் மாவட்ட ஆட்சியர் சம்மனை ஏற்று வாரன்ட் பிறப்பிக்க முடியும் என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்துக்கு சட்ட அமைச்சகம், சட்டப்பேரவைகள், உள்துறை அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை ஒப்புதல் தெரிவித்துள்ளன.

இந்த சட்ட திருத்தத்தை அமைச்சரவையில் தாக்கல் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறோம். நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்ற முயற்சி செய்வோம் என கூறியுள்ளார்.

சமீபத்தில், மனைவியரை ஏமாற்றிய 8 இந்தியவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்