உண்மையாக தேடினால் இறையருள் கிடைக்கும்

Report Print Gokulan Gokulan in மதம்

‘அவன் உண்மையுள்ளவனாயிருந்த படியால் அவன்மேல் சுமந்த யாதொரு குற்றமும் குறையும் காணப்படவில்லை’ (தானி.6:4).

அரச குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தவர், தானியேல். சிறுவயதில் பகைவரால் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டவர். ஆனால், ‘என்ன நேர்ந்தாலும் உயிருள்ளவரை கர்த்தரையே உண்மையாய் பின்பற்றுவேன்’ என்று உறுதிபூண்டவர். சிறை பிடித்து போகப்பட்ட இடத்தில் தரியுராஜா என்ற அரசனிடம் பிரதான மந்திரியாக தானியேல் இருந்தார்.

ஒரு நாள் தரியுராஜா, ‘என் ஜனங்கள் எனக்கு கீழ்படிகின்றார்களா?’ என்று சோதிக்க முடிவு செய்தார். இதற்காக அவர் ஒரு உத்தரவு பிறப்பித்தார். இதன்படி, ‘முப்பது நாள்வரை எந்த தேவனையாகிலும், யாதொரு மனிதர்களும் விண்ணப்பம் செய்து ஜெபம் செய்யக்கூடாது. மீறினால் அவன் சிங்கங்கள் அடைக்கப்பட்டுள்ள இடத்தில் போடப்படுவான்’, என்று ராஜா கட்டளை பிறப்பித்தார்.

ஆனால், ராஜாவின் உத்தரவை தானியேல் ஏற்கவில்லை. உண்மையாய் இறைவனிடத்தில் அன்புகூர்ந்து, முன்பு செய்து வந்தபடியே தன்னுடைய வீட்டு பால்கனியில் எருசலேம் தேவாலயத்தை நோக்கி மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்கால் படியிட்டு விண்ணப்ப ஜெபம் செய்து தேவனை பணிந்து கொண்டான்.

தேசாதிபதிகளும், பிரதானிகளும் தரியுராஜாவிடத்தில் சென்று, ‘தானியேல் ராஜாவை மதியாமல் தினமும் மூன்று வேளையும் ஜெபம் செய் கிறான்’ என்றார்கள். ராஜா கட்டளையிட தானியேலை சிங்கங்களின் கூண்டுக்குள் போட்டார்கள். ஒரு இரவு முழுவதும் தானியேல் சிங்கங் களின் கூண்டுக்குள் இருந்தான்.

தானியேல் சர்வ வல்லமையுள்ள தேவனை உண்மையாய் தேடினபடியால் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டார். மறுநாள் காலையில் தரியுராஜா சிங்கங்களின் கூண்டு அருகே வந்து தானியேலை நோக்கி, ‘ஜீவனுள்ள தேவனுடைய தாசனே நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னை சிங்கங் களுக்கு தப்புவித்தார்’ என்றான். தானியேல் சிங்கங்களின் கூண்டில் இருந்து வெளியே வந்தான். அவன் உடலில் ஒரு சேதமும் காணப்படவில்லை. உண்மையாய் ஆண்டவரை தேடுகிறவர்களுக்கு எந்த ஆபத்தான சூழ்நிலைகள் வந்தாலும் ஒரு சேதமும் ஏற்படுவது இல்லை என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.

‘தேவனோ அவனுடனேகூட இருந்து எல்லா உபத்திரவங் களின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமூகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார். அந்த ராஜா அவனை எகிப்து தேசத்திற்கும் தன் வீடனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்’ (அப்.7:10)

யாக்கோபுக்கு பன்னிரெண்டு பிள்ளைகளில் யோசேப்பு உண்மையாக இறைவனை தேடினான். யாக்கோபு இறக்கின்ற வேளையில் எல்லா பிள்ளைகளையும் அழைத்து ஆசீர்வதித்தான். யாக்கோபு, யோசேப்பை எல்லாரையும்விட அதிகமாக ஆசீர்வதித்தான்.

யோசேப்பு உண்மையாய் தேவனை தேடினபோது பதினேழு வயதிலே தேவதரிசனத்தை கண்டு தன் எல்லா சகோதரரையும் விட உயர்ந்த இடத்தில் இருப்பதை கண்டான். அவன் சகோதரர்கள் பொறாமையால் அவனை ஆழமான குழியிலே போட்டார்கள். பின்பு குழியில் இருந்து தூக்கி எடுத்து மீதியானியருக்கு விற்றனர். மீதியானியர்கள் யோசேப்பை எகிப்தில் பார்வோன் மன்னனுக்கு விற்றார்கள்.

யோசேப்பு அழகான தோற்றமும், கவர்ச்சியான முக அழகும் உடையவனாக இருந்தான். வீட்டு எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல் போனதால் சிறைச்சாலைக்கு சென்றான். ஆனால் கர்த்தர் யோசேப்போடே இருந்தார். சிறைச் சாலைத் தலைவனிடத்தில் யோசேப்புக்கு தயவு கிடைத்தது.

ஆண்டவர் பார்வோன் அரசருக்கு ஒரு தேவ தரிசனத்தை கொடுத்தார். அதன் அர்த்தத்தை ஒருவராலும் சொல்ல முடியவில்லை. யோசேப்பு சொல்லுவார் என்று கேள்விப்பட்டு சிறைச்சாலையில் இருந்து யோசேப்பை அழைத்து வந்தார்கள். பார்வோன் அரசன் தேவ தரிசனத்தை சொன்னபோது யோசேப்பு ‘தேவனே மங்களமான உத்தரவு தருவார்’ என்றான்.

தேவ தரிசனத்தின் அர்த்தம் என்ன வென்றால் ‘எகிப்து தேசமெங்கும் ஏழு வருடம் பரிபூரணமான விளைச்சல் உண்டாகும், எல்லா இடமும் ஆசீர்வாதமாக இருக்கும். பின்பு ஏழு வருடம் பஞ்சம் உண்டாகும். வருடந்தோறும் விளையும் தானியங்களை சேர்த்து வைத்து பஞ்சகாலத்தில் பயன்படுத்த வேண்டும்’ என்பதே.

பார்வோன் யோசேப்பை நோக்கி ‘தேவ ஆவியை பெற்ற இந்த மனுஷனைப் போல வேறு யாரும் தேசத்தில் இல்லை’ என்று தன் கையில் போட்டிருந்த முத்திரை மோதிரத்தை கழற்றி யோசேப்பின் கையில் போட்டான். தங்க நகைகளை அணிவித்து, விலை உயர்ந்த உடைகளை உடுத்தி எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினான். யோசேப்பின் உத்தரவு தான் எகிப்து தேசம் முழுவதும் செயல்பட்டது. யோசேப்பு உண்மையாய் பரலோக தேவனை தேடினபோது தேவன் அவனை உயர்ந்த இடத்திலே வைத்தார்.

‘உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார்’ (சங்.145:18).

‘ஆபிரகாம் உண்மையாய் தேவனை தேடினான். அவன் செல்வ சீமானாயிருந்தான் (ஆதி.24:35). ‘ஈசாக்கு உண்மையாய் தேவனை தேடினான். அவன் நூறு மடங்கு ஆசீர்வதிக்கப்பட்டான்’ (ஆதி.26:12). ‘யாக்கோபு உண்மையாய் தேவனை தேடினான். அங்கே அவனை ஆசீர்வதித்தார்’. (ஆதி.32:29)

நாம் உண்மையாய் ஆண்டவரை தேடினால் எல்லா வியாதியிலிருந்தும், ஆபத்துகளில் இருந்தும், எல்லா நெருக்கடிகளில் இருந்தும் நம்மை தப்புவித்து ஆசீர்வதிப்பார். ஆமென்.

- Maalai Malar

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers