சோதனையை தாங்கிக் கொள்வோம்

Report Print Gokulan Gokulan in மதம்

ஏழை மனிதன் கடவுளை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டான். கடவுளும் அவன் வேண்டுதலுக்கு செவிசாய்த்து காட்சியளித்தார். கடவுளிடம் தனக்கு ஒரு நீண்டநாள் சந்தேகம் இருப்பதாக சொன்னான்.

கடவுள் அவனிடம் சொல் என்றார். உயிரினங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக வாழத்தானே நீர் படைத்தீர். ஏன் பலருக்கு மகிழ்ச்சியை அளிப்பதில்லை? என்றான்.

கடவுள் உடனே, மக்கள் என்னிடம் கேட்பதைத்தானே கொடுக்க முடியும். என்னோடு ஒருநாள் உடனிருந்து, மக்கள் வைக்கும் கோரிக்கைகளைக் கேட்டுப்பார் உனக்கு புரியும் என்றார்.

மக்கள் வரிசையாக வந்தனர். முதலாமவர் வந்தார். என் வீட்டுக்கு உறவினர்களெல்லாம் வருகிறார்கள். நீர் பணம் கொடு என்று கேட்டார். இரண்டாமவர் வந்தார். நான் தேர்தலில் போட்டியிடுகிறேன், நீர் எனக்கு வெற்றி தந்து, பதவி தர வேண்டும் என்று கேட்டார். மூன்றாமவர் வந்தார். நான் வாழ்வதற்கு இந்த இல்லம் போதுமானதாக இல்லை. நீர் எனக்கு பெரிய மாளிகையைக் கொடு என்று கேட்டார்.

இப்படி இறைவன் தந்த நல்வாழ்வை நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் செலவிட வேண்டும் என்று யாருமே கேட்கவில்லை. இன்றைய உலகம் ஆடம்பரங்கள் மட்டுமே உண்மையானது என்பதைத்தான் நமக்கு கற்பிக்கிறது. நாம் எவ்வாறு ஆசைக்கு அடிமையாகி சோதனைக்கு உட்படுகின்றோமோ, அதே போன்றே இறைமகன் இயேசுவும் சோதிக்கப்பட்டார்.

இயேசு மூன்று விதமான சோதனைகளை எதிர்கொண்டார். ஒன்று கல்லை அப்பமாக்கு- இன்பம் வரும், இரண்டு கட்டிடத்தில் இருந்து குதி- புகழ் சேரும், மூன்று காலில் விழுந்து வணங்கு- பொருள் கிடைக்கும் என்பவை அந்த 3 சோதனைகளாகும்.

இந்த சோதனைகளையும் இறைவார்த்தையின் துணைகொண்டு இறைமகன் இயேசு வென்றார். அவரின் பதிலே இறைவார்த்தையாகத்தான் இருந்தது. ஆதலால் நமது வாழ்வில் நாம் எதிர்கொள்கின்ற சோதனைகளை இறைவார்த்தை துணையால் வெல்வோம்.

யாக்கோபு 1:2-ல் “பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்” எனப்பார்க்கின்றோம். மேலும் யோக்கோபு 1:14-ல் “ஒவ்வொருவரும் தம் சொந்த தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கி தன்வயப்படுத்துகின்றது” எனப் பார்க்கிறோம்.

ஆகவே நாமும் கட்டுப்பாடு உடையவர்களாய், முறையாக ஆற்றல் உடையவர்களாய் இறையருள் பெறவேண்டும். ஆண்டவர் சொல்வது போன்று சோதனையை மன உறுதியுடன் தாங்கிக் கொள்வோம்.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சோதிக்கப்படுவது உறுதி. மன உறுதியோடும், கட்டுப்பாட்டோடும், நிதானமாகச் செயல்படும்போது சோதனையை வெல்ல முடியும்.

சோதனையை மன உறுதியுடன் தாங்குவோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, கடவுள் வாக்களித்த வெற்றி வாகையினை பரிசாய் பெற்றுக்கொள்ள முடியும். கடவுளின் திருமுன் நிற்க தகுதியுள்ளவர்களாக நாம் மாற முடியும்.

ஆனால் ஒரே ஒரு தீர்மானத்தை மட்டும் எடுப்போம். “நான் யாரையும் தீமைக்குள்ளும், சோதனைக்குள்ளும் தள்ள மாட்டேன். என்னால் முடிந்த மட்டும் பிறரை அன்பு செய்வேன்” என்ற உறுதியோடு வாழ்வோம்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers