இலங்கை வீரர்களை மிரட்டிய இந்தியா? பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு பதிலடி!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களை இந்தியா மிரட்டியதாக கூறிய பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் உசேன் சவுத்ரியின் குற்றச்சாட்டுக்கு இலங்கை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மறுப்பு தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

ஆனால் பாதுகாப்பு கருதி இந்த தொடரில் பங்கேற்கவில்லை என இலங்கை டி-20 அணித்தலைவர் மலிங்கா, மேத்யூஸ், திசரா பெரேரா, தனஞ்செய டிசில்வா, அகிலா தனஞ்செயா, லக்மல், சண்டிமல், டிக்வெல்லா, குசால் பெரேரா, கருணாரத்னே உள்ளிட்ட 10 முன்னணி வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தனர்.

இதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியமும் ஒப்புதல் அளித்ததை அடுத்து, பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இருக்கும் ஃபவாத் உசேன் சவுத்ரி இந்தியா மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

"இலங்கையை சேர்ந்த வீரர்கள் பாகிஸ்தானுக்கு சென்றால், அவர்கள் தங்களுடைய ஐபிஎல் ஒப்பந்தங்களை இழக்க நேரிடும் என இந்தியா அச்சுறுத்தியிருப்பதாக, கிரிக்கெட் வர்ணனனை செய்யும் சிலர் என்னிடம் கூறியுள்ளனர்".

"இந்தியாவின் மிகவும் மலிவான தந்திர செயல் இது. விளையாட்டு முதல் விண்வெளி வரை எங்களுடன் சண்டையிடுவதை நாங்கள் கண்டிக்கிறோம். இந்திய விளையாட்டு அதிகாரிகளின் மிகவும் மலிவான நடவடிக்கை இது என குறிப்பிட்டுள்ளார்".

இந்த நிலையில் இதற்கு பதில் கொடுத்துள்ள இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, 2009ம் ஆண்டு எங்களுடைய வீரர்கள் பேருந்தில் பயணம் செய்தபோது பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட சம்பவத்தின் அடிப்படையிலே 10 வீரர்கள் "முற்றிலும்" சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது 8 பேர் கொல்லப்பட்டனர், பலரும் படுகாயமடைந்தனர்.

இலங்கை வீரர்கள் பாகிஸ்தானில் விளையாடுவதை இந்தியா தடுத்துள்ளது என்பதில் எந்த உண்மையும் இல்லை. எங்களுடைய வீரர்களின் முடிவை மதித்தே விளையாட விரும்பும் வீரர்களை அனுப்பியுள்ளோம். எங்களிடம் முழு பலம் உள்ள அணி உள்ளது, பாகிஸ்தானில் பாகிஸ்தானை வெல்லும் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்