பாகிஸ்தான் அணியை மாற்றியமைக்க உள்ளேன்.. வேறு மாதிரியாக இருக்கும்! பிரதமர் இம்ரான்கான்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தங்கள் நாட்டு கிரிக்கெட் அணியை மாற்றி அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. அத்துடன் இந்திய அணியிடம் மிகப்பெரிய தோல்வியையும் லீக்கில் சந்தித்தது. இதனால் அந்த அணியின் மீது கடுமையான விமர்சனங்களை பாகிஸ்தான் ரசிகர்களே முன்வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டனை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியை மாற்றி அமைக்க உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அரசுமுறை பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள அவர், அங்குள்ள பாகிஸ்தானியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியபோது, ‘உலகக்கோப்பை தொடர் தற்போது முடிவடைந்துள்ளது.

எதிர்பார்த்த அளவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆட்டம் இல்லை. பாகிஸ்தான் அணியை மாற்றி அமைக்க உள்ளேன். எனது வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த உலகக் கோப்பையில் நீங்கள் பார்க்கும் பாகிஸ்தான் அணி வேறு மாதிரியாக இருக்கும்.

பாகிஸ்தான் அணியை வேறு தளத்திற்கு கொண்டு செல்வேன். பாகிஸ்தான் அணியின் முழுத்திறமையும் வெளிக்கொண்டு வர உள்ளோம்’ என தெரிவித்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்