நாட்டைப் பற்றி நினைக்காமல் பணத்தை தெரிவு செய்தீர்கள்! டிவில்லியர்ஸை கடுமையாக விமர்சித்த வேகப்புயல்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

நீங்கள் நாட்டிற்காக ஆடாமல் அதற்கு பதிலாக பணத்தை தெரிவு செய்தீர்கள் என்று, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டி வில்லியர்ஸை பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விமர்சித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்த அணியின் துடுப்பாட்ட நிலை சரிவை சந்தித்து வருகிறது.

தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியடைவது இதுவே முதல்முறையாகும்.

டி வில்லியர்ஸின் ஓய்வு அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் மீண்டும் ஓய்வில் இருந்து உலகக்கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதற்கு தென் ஆப்பிரிக்க அணி மறுப்பு தெரிவித்து அனுமதி வழங்கவில்லை என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் டி வில்லியர்ஸை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அக்தர் அதில் கூறுகையில்,

‘ஐ.பி.எல் மற்றும் பி.எஸ்.எல் தொடர்களிலிருந்து விலகி உலகக்கோப்பை தொடருக்கு தயாராகுமாறு டி வில்லியர்ஸுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஆனால், டி வில்லியர்ஸ் இதை தவிர்க்கவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அத்துடன் அவர் நாட்டின் பக்கம் நிற்காமல் அதற்கு பதிலாக பணத்தை தெரிவு செய்தார்.

அவர் ஓய்வை அறிவித்தபோது தென் ஆப்பிரிக்கா அணி மோசமான கட்டத்தில் இருந்தது. எனினும் இதனைக் கருத்தில் கொள்ளாமல் டிவில்லியர்ஸ் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.

Getty Images

இதேபோன்று இந்தியாவில் நடைபெற்ற ஐ.சி.எல் தொடரில் விளையாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் அங்கு சென்று விளையாடுவதை தவிர்த்தேன். அத்துடன் பணத்துக்கு பதிலாக எனது நாட்டை தெரிவு செய்தேன். எப்போதும் எனது நாட்டிற்காக விளையாடுவதே எனது குறிக்கோளாக இருந்தது.

அதேபோல டி வில்லியர்ஸும் நாட்டிற்காக விளையாடி இருந்தால், இந்த உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி இவ்வளவு மோசமாக தோல்வியடைந்திருக்காது. ஏனென்றால் நடுகள ஆட்டக்காரர் வரிசையில் டி வில்லியர்ஸ் இருந்திருந்தால் அவரது அனுபவமான ஆட்டம் அணிக்கு கை கொடுத்திருக்கும். ஆனால் டி வில்லியர்ஸ் அதை செய்யவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்