கோபப்பட்டு பேசிய டோனி.. என்னை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறினார்! சென்னை வீரர் சாஹர் விளக்கம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

டோனி சக அணி வீரர் சாஹரிடம் கோபப்பட்டு பேசிய வீடியோ வைரலான நிலையில், அவர் தன்னை கட்டிப்பிடித்து உற்சாகப்படுத்தியதாக சாஹர் தற்போது தெரிவித்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 39 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அப்போது 19வது ஓவரை வீசிய சாஹர், முதல் பந்தையே ‘No ball' ஆனது. அதில் பவுண்டரி அடிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் வீசிய ப்ரீ ஹிட் பந்தும் ‘No ball' ஆனது. அதில் இரண்டு ஓட்டங்கள் அடிக்கப்பட்டது.

‘No ball'-க்கு 2 ஓட்டங்கள், அடிக்கப்பட்டது 6 ஓட்டங்கள் என பந்தே வீசாமல் சாஹர் 8 ஓட்டங்களை வாரி வழங்கினார். இதனால் அணித்தலைவர் டோனி கோபமடைந்து, சாஹரிடம் வந்து ஆலோசனை வழங்கினார்.

அதன் பின்னர், தான் வீசிய 6 பந்துகளில் 5 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை சாஹர் வீழ்த்தினார். போட்டிக்கு பின்னர் சாஹருக்கு டோனி ஆலோசனை வழங்கிய புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் சாஹர் இதுகுறித்து கூறுகையில், ‘போட்டி முடிந்த பின்னர், ஒவ்வொரு வீரரும் என்னிடம் வந்து வாழ்த்து தெரிவித்தனர். டெத் ஓவரில் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததாக கூறினர். டோனி என்னிடம் வந்தார்.

என்னைப் பார்த்து சிரித்தார், கட்டிப்பிடித்து சிறப்பாக பந்துவீசியதாக பாராட்டினார். நான் இரண்டு மோசமான டெலிவரி செய்து விட்டேன். ஆனால், உடனடியாக மீண்டுவிட்டேன். டோனியும் என்னை உற்சாகப்படுத்தினார். சிறப்பாக பந்துவீசுமாறு வலியுறுத்தினார்.

அணியின் வெற்றிக்காக பங்களிப்பு செலுத்தியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. முதலில் மெதுவாக பந்துவீச முயற்சித்தேன். ஆனால், பந்து என்னுடைய கையைவிட்டு சென்றுவிட்டது. அந்தப் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது.

மீண்டும் அதேபோல், முயற்சித்தேன். ஆனால், அதே தான் நடந்தது. உடனடியாக தவறினை திருத்திக் கொண்டு பந்துவீசினேன். அந்த தவறை திரும்பவும் செய்யவேயில்லை. இந்த ஆண்டு கோப்பையை தக்க வைத்து கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

என்னால் முடிந்த அளவிற்கு சி.எஸ்.கே-விற்கு பங்களிப்பை செலுத்துவேன். நிறைய விக்கெட் எடுக்க வேண்டும். டெத் ஓவரில் சிறப்பாக செயல்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்