இலங்கை டூ ரமேஷ்வரம்: 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்சிறுவன்! குவியும் பாராட்டு

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

பாக்ஜலசந்தியை 10 மணி நேரத்தில் நீந்தி கடந்து குற்றாலீசுவரன் சாதனையை முறியடித்த தமிழக சிறுவனுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் - தாரணி தம்பதியினரின் மகன் ஜஸ்வந்த் (10), தனியார் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் மாவட்டம், மாநிலம் என பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதங்களை வென்றுள்ளார்.

2017ம் ஆண்டு தன்னுடைய 8 வயதில் தொடர்ந்து 81 நிமிடம் நீந்தி உலகசாதனை படைத்தார்.

இந்த நிலையில் குற்றாலீசுவரனை போல பாக்ஜலசந்தியை கடந்து சாதனை படைக்க விரும்பியுள்ளார். அதற்கான சிறப்பு பயிற்சிகளையும் மேற்கொண்ட ஜஸ்வந்த், தன்னுடைய பயிற்சியாளர், ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலருடன் புதன்கிழமையன்று தலைமன்னார் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீந்த துவங்கிய ஜஸ்வந்த், 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடியின் அரிச்சல் முனையை, பிற்பகல் 2.30 மணிக்கு வந்தடைந்தார்.

இதன்மூலம் கடந்த 1994ம் ஆண்டு பாக் ஜலசந்தியை 16 மணி நேரத்தில் கடந்த குற்றாலீசுவரனின் சாதனை முறியடிக்கப்பட்டது.

பின்னர் ராமேஸ்வரத்திற்கு வந்தடைந்த ஜெஸ்வந்திற்கு இந்திய கடலோர காவல்படையினர் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சாதனை படைத்திருக்கும் சிறுவனுக்கு அரசு அதிகாரிகள், தலைவர்கள் துவங்கி பொதுமக்கள் பலரும் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்