பாகிஸ்தான் வீரர்களுக்கு மறுப்பு தெரிவித்த இந்தியா: கடும் தண்டனை விதித்த சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

டெல்லியில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் விளையாட இரு பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மறுப்பு தெரிவித்ததால் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு இந்தியாவிற்கு கடும் தண்டனை விதித்துள்ளது.

புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் பலியானதை அடுத்து, டெல்லியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த ஜிஎம். பஷிர் மற்றும் கலில் அகமெட் ஆகியோர் பங்கேற்பதற்கு விசா கொடுக்காமல் இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான், சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு (ஐஓசி)-டம் புகார் அளித்திருந்தது. அதன் பேரில், ஐஓசி, இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் அமைப்பு ஆகியவை பல மணி நேரம் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.

ஆனால் இந்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததை அடுத்து, "2020-ம் ஆண்டு விளையாட்டுப் போட்டிக்கான 16 வகை ஒலிம்பிக் அந்தஸ்துகளும் இந்தியாவிற்கு ரத்து செய்யப்படுகிறது. 2 பிரிவுகளுக்கும் மட்டுமே வழங்கப்படுகிறது" என சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு அமைப்பின்(ஐஎஸ்எஸ்எப்) தலைவர் விளாதிமிர் லிசின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு(ஐஓசி) அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அதில், 'பாகிஸ்தான் வீரர்கள் இருவருக்கு விசா மறுக்கப்பட்டதையடுத்து, புதுடெல்லியில் நடக்கும் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பைப் போட்டியில் 25 எம் ரேபிட் பிஸ்டர் பிரிவுக்கான ஒலிம்பிக் தகுதி பெறும் அந்தஸ்து பறிக்கப்படுகிறது.

ஐஓசி, இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் அமைப்பு ஆகியவை கடைசி நேரம் வரை இந்திய அரசுடன் ஆலோசனை நடத்தினோம். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதற்கு எந்தவிதமான உத்தரவாதத்தையும் இந்திய அரசு அளிக்கவில்லை. அவர்களுக்கு அனுமதியும் அளிக்கவில்லை. இதனால் இந்தியாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை என்பது ஒலிம்பிக்கின் அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமானது, வீரர்களை வேறுபாட்டுடன் நடத்தக்கூடாது என்ற கொள்கைக்கு விரோதமானது. விளையாட்டில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்று பல முறை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

இதையடுத்து, இந்திய ஒலிம்பிக் கமிட்டியுடன் எதிர்காலத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, ஒலிம்பிக் தொடர்பாக பேச்சு நடத்துவது என அனைத்து ஆலோசனைகளையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்.

எதிர்காலத்தில் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தடையின்றி போட்டியில் பங்கேற்க அனுமதிப்போம் என்று எழுத்துப்பூர்வமாக அனுமதியளிக்காதவரை ஆலோசனை நடத்தமாட்டோம். இந்த உறுதிமொழி அளிக்காதவரை எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் ஏதும் இந்தியாவில் நடத்த அனுமதி வழங்க கூடாது என்று சர்வதேச கூட்டமைப்புக்கும்(ஐஎப்) பரிந்துரைக்கப்பட்டுள்ளது''.

உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள 61 நாடுகளைச் சேர்ந்த 500 வீரர், வீராங்கனைகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers