இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பிள்ளைகள் கெட்டுப்போவதற்கு பணமும், புகழும் மட்டும் காரணம் அல்ல பெற்றோரும் சம அளவு காரணம் தான் என்று விளாசியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கேல்.எல்.ராகுல் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அதன் பின்னர் தடை நீக்கப்பட்டு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். பாண்டியா-ராகுலின் சர்ச்சைக் கருத்துக்கு இளம் வயதிலேயே பணம், புகழ் தான் காரணமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் கூறுகையில், ‘நான் இந்த விடயத்தில் வீரர்கள் பேசியதற்கு இளம் வயதிலேயே கோடிக்கணக்கில் பணம், புகழ் கிடைத்ததால் அவ்வாறு பேசியதற்கு முழுமையான காரணம் இல்லை.
அதையும் தாண்டி பெற்றோர்களின் வளர்ப்பும், கவனிப்பும் சம அளவு காரணம். இந்த மாதிரி குணங்கள் எல்லாம் இளம் வயதிலேயே வரக்கூடியது. பணக்காரர்கள் வீட்டில்தான் இவ்வாறு நடக்கும் என்பதற்கில்லை.
பணக்காரர் அல்லது ஏழை எந்த வீட்டிலும், ஒரு ஆண் அல்லது பெண் பிள்ளைக்கு அதிகமான கவனம் கொடுக்கப்படும்போது, அன்புகாட்டி, அதிக உரிமை அளிக்கப்படும்போது அவர்களும் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.
ஒரு நபருக்காக அனைத்தையும் தியாகம் செய்தால், அது அதிகமான உரிமை எடுத்துக்கொள்வதற்கு வழிவகுக்கும். இளம் வயதில் அதிகமான செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட குழந்தைகள் இதை உணர்ந்திருப்பார்கள்.
ஒரு வீரருக்கு அதிகமான உரிமை அளிக்கப்பட்டாலும் இதுபோல பிரச்சனை தான் வரும். சில சமயம் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். தேசிய விளையாட்டு அகாடமியில் ஏராளமான பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் என்னிடம் அடிக்கடி சொல்வதெல்லாம், சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர்கள் எல்லாம் மோசமான பீல்டர்களாக இருக்கிறார்கள் அல்லது விக்கெட்டுகளுக்கு இடையே சரியாக ஓட முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு வீரரை சரியாக உருவாக்குவதில் பயிற்சியாளருக்கு இருக்கும் அதே பங்களிப்பு பெற்றோருக்கும் உண்டு. இளம் வயதில் அவரைக் கட்டமைப்பது பெற்றோர் தான். குழந்தைகள் செய்த தவறையும், ஏமாற்றுத்தனத்தையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும், சரியானது அல்ல என உணர்த்த வேண்டும்.
அதேபோல அணியில் உள்ள மூத்த வீரர்களும் வளரும் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக, ஆதர்ஷ வீரர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு நல்ல விடயங்களையும் கற்றுத்தருபவராக, சிறந்த உதாரணமாக திகழ வேண்டும்.
தவறு நடப்பது இயல்பு தான், ஆனால் அந்த தவறில் இருந்து பாடம் கற்று மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும். பாண்டியாவும், ராகுலும் இளம் வீரர்களுக்கு நல்ல மாதிரியாக உருவாக வேண்டுமானால், தாங்கள் சந்தித்த கடினமான நேரங்களை பாடமாக எடுத்துக் கொண்டு திருத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்