எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கோங்க..உயிருக்கு போராடிய வீரருக்கு உதவிய இளம் வீரர் க்ருணல் பாண்ட்யா

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜேக்கப் மார்டினின் சிகிச்சைக்கு, இந்திய அணி வீரர் குர்ணால் பாண்டியா நிரப்பப்படாத காசோலையை வழங்கியுள்ளார்.

பரோடாவைச் சேர்ந்தவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரருமான ஜேக்கப் மார்டின் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால், ஒரு நாளைக்கான மருத்துவ செலவு ரூ.70,000 தேவைப்படுவதால், மார்டினின் மனைவி பி.சி.சி.ஐ நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உதவு கோரினார். அதனைத் தொடர்ந்து பி.சி.சி.ஐ நிர்வாகம் ரூ.5 லட்சமும், பரோடா கிரிக்கெட் அமைப்பு ரூ.3 லட்சமும் அளித்தன.

மேலும், இதனை அறிந்த முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி மருத்துவ செலவுக்கு உதவுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் வீரர்கள் ஜாகீர்கான், முனாப் படேல், யுசுப் பதான், இர்பான் பதான் ஆகியோர் உதவி செய்வதாக உறுதியளித்தனர்.

இந்நிலையில், ஜேக்கப் மார்ட்டினின் மருத்துவ செலவுக்கு உதவிகளை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பி.சி.சி.ஐ முன்னாள் செயலாளர் சஞ்சய் படேலை, இந்திய வீரர் குர்ணால் பாண்டியா சந்தித்தார்.

அப்போது தொகை நிரப்பப்படாத காசோலையை அளித்து, மார்டினுக்கு தேவைப்படும் மருத்துவ செலவுக்கான தொகையை அதில் நிரப்பி எடுத்துக்கொள்ளுமாறும், எக்காரணத்தைக் கொண்டும் ஒரு லட்சத்துக்கு குறைவாக நிரப்பக்கூடாது என்றும் அவர் அன்புக் கட்டளையிட்டதாக சஞ்சய் படேல் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் கிரிக்கெட் உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers