தனது குருவின் உடலை தோளில் சுமந்து சென்ற சச்சின் டெண்டுல்கர்: வைரலாகும் புகைப்படம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரின் ஆரம்ப கால கிரிக்கெட் பயிற்சியாளரான ராமாகாந்த் அச்ரேகர் காலமானதைத் தொடர்ந்து, சச்சின் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு உடலை சுமந்து சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சச்சினுக்கு பயிற்சியளித்தது மட்டுமன்றி, காம்ப்ளி, பிரவின் அம்ரே போன்ற சிறந்த வீரர்களையும் உருவாக்கியவர் ராமாகாந்த் அச்ரேகர். மேலும், சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யார் விருதை பெற்ற இவர், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று தனது 86வது வயதில் காலமானார்.

அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் பிரபலங்கள் பலர் அச்ரேகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘அச்ரேகர் செல்வதால், இனி சொர்க்கத்திலும் கிரிக்கெட் வளம் பெறும். அவரது மற்ற மாணவர்கள் போல், நானும் கிரிக்கெட்டின் ஏ, பி, சி, டி அவரிடம் தான் கற்றேன். அவர் எனது வாழ்க்கைக்கு வழங்கியதை வார்த்தைகளால் கூற முடியாது.

இன்று நான் நிற்கும் இடத்துக்கு அவர் தான் அடித்தளம் இட்டவர். கடந்த மாதம் மற்ற சில மாணவர்களுடன் அவரைச் சந்தித்துப் பேசினேன். பழைய நினைவுகளைப் பகிர்ந்து சிரித்து மகிழ்ந்தோம். அவர் நேர்மையாக விளையாட மட்டுமல்ல, நேர்மையாக வாழவும் கற்றுக் கொடுத்தார்.

உங்கள் வாழ்க்கையில் எங்களையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி சார். சிறப்பாக விளையாடினீர்கள் சார். நீங்கள் எங்கு இருந்தாலும், அங்கும் சிறந்த பயிற்சியாளராக இருப்பீர்கள்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று அச்ரேகரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட டெண்டுல்கர், அவரது உடலை தனது தோளில் சுமந்து சென்றார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்