தன் மீது பலாத்கார குற்றம் சுமத்திய பெண்ணை திருமணம் செய்த வீரர்

Report Print Kavitha in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய டேபிள் டென்னிஸ் வீரரான சுவுமியாஜித் கோஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன் தன் மீது பலாத்கார செய்ததாக குற்றம்சாட்டு அளித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன் 18 வயது இளம்பெண், இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சவுமியாஜித் கோஷ் மீது பாலியல் பலாத்காரப் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் புகார் அளித்த நேரம், அவர் ஜெர்மனியில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று வந்தவேளையில் தன் மீது மேற்கு வங்கம், பரசாத் பொலிஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அறிந்த கோஷ் கைது நடவடிக்கைக்குப் பயந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணித்து வந்தார். கடந்த மே மாதம் சவுமியாஜித் கோஷ் நாடு திரும்பியுள்ளார்.

அவரிடம் பொலிசார் விசாரணை நடத்திவந்தனர். ஆனால், கைது செய்யவில்லை.

இது குறித்து சவுமியாஜித் கோஷ் நிருபர்களிடம் டெல்லியில் கூறியதாவது:

“இந்தியாவில் உள்ள விளையாட்டு வீரர்கள் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அந்த கனவில்தான் நானும் தயாராகிக்கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் ஒரு பெண் அளித்த புகார், என்னை மிகவும் பாதித்தது. இதை எப்படி எதிர்கொள்வது என்றும் தெரியவில்லை.

என் மீது புகார் அளித்த பெண்ணை மைனராக இருக்கும் போதிருந்து எனக்கு தெரியும், இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம்.

ஆனால், எந்தவிதமான பலாத்காரத்திலும் ஈடுபடவில்லை. என் மீதான புகார் தொடர்பான வழக்கு முடியும் தருவாயில் இருக்கிறது. என் மீது புகார் கொடுத்த பெண்ணையே நான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன்.

என்னுடைய இக்கட்டான காலத்தில் துணையாக இருந்த சகவீரர்கள் சரத் கமல், சத்யன், ஹர்மித் தேசாய் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன் ”என்று கூறியுள்ளார்.

ஆனால், திருமணத்துக்கான காரணத்தை அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

கோஷ் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணும் தற்போது அவரைத் திருமணம் செய்தவரான துலிகா தத்தா இது குறித்து கூறுவதாவது,

‘‘காதலித்தவரை திருமணம் செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய கணவர் மீது கொடுத்துள்ள புகாரை திரும்புப் பெற இருக்கிறேன். அதற்கான பணியில் வழக்கறிஞர் ஈடுபட்டுள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறோம். எங்களுக்குள் இருந்த தவறான புரிதல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டது’’ எனக் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்