அமெரிக்காவின் பைஸர் நிறுவன கொரோனா தடுப்பு மருந்தால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் நல்ல மாற்றம் காண முடிகிறது என இஸ்ரேல் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இஸ்ரேல். இந்த நிலையில் டிசம்பர் 19 முதல் 24 வரை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும்,
கொரோனா பாதிப்பும் குறிப்பிடத்தக்க சரிவை கண்டுள்ளது எனவும் இஸ்ரேலின் மக்காபி ஆராய்ச்சி மையம் கண்டறிந்து தெரிவித்துள்ளது.
50,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்திய மக்காபி ஆராய்ச்சி மையம்,
60 வயதுக்கு மேற்பட்டவர்களில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை நாடுவோர்களின் எண்ணிக்கை 60 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்திருப்பதைக் கண்டறிந்தது.
ஆனால், இதனை காரணமாக கொண்டு கொரோனா சோதனை மேற்கொள்ளாமல் இருப்பதும், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் தவிர்ப்பதும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசு அறிவித்துள்ளபடி, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் அந்த அமைப்பு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இதுவரை மொத்தமுள்ள 9 மில்லியன் மக்கள் தொகையில் 2.5 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது மொத்த மக்கள் தொகையில் 38 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசியில் ஒரு டோஸ் மருந்தாவது எடுத்துக் கொண்டுள்ளனர்.
திட்டமிடப்பட்டுள்ளபடி, கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவது தொடர்ந்து நடைபெற்றால், மிக விரைவில் நாம் மீண்டு வர முடியும் என இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததை அடுத்து இஸ்ரேலில் மூன்றாவது தேசிய ஊரடங்கு அமுலில் இருந்து வருகிறது. இதுவரை வெளியாக தரவுகள்படி, இஸ்ரேலில் 593,961 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சை பலனின்றி இதுவரை 4,341 பேர்கள் மரணமடைந்துள்ளதாக அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.