ஈராக்கின் முக்கிய சந்தைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இருவேறு தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் உடல் சிதறி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாக்தாதில் அமைந்துள்ள முக்கிய சந்தைப்பகுதியிலேயே இந்த கொலைவெறி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் 50-கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும், மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் உள்விவகார அமைச்சரகம் தகவல் தெரிவித்துள்ளது.
முதல் தற்கொலை குண்டுதாரி, பரபரப்பான சந்தைக்குள் நுழைந்து, தமக்கு சுகவீனமாக இருப்பதாக கூறி உதவி கோரியுள்ளார்.
அவரது பேச்சை நம்பிய அப்பாவி மக்கள் அவருக்கு உதவும் நோக்கில் அருகாமையில் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்னொருர் வெடிகுண்டை இயக்கியுள்ளார். இதில் கூடியிருந்த மக்கள் பலர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
கடந்த ஓராண்டில் இல்லாத மிக மோசமான தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் இதுவென அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐ.எஸ் தீவிரவாதிகளை முற்றாக ஒழித்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறி வந்தாலும்,
ஈராக் இன்னும் அதன் தாக்கத்தை நாளும் எதிர்கொண்டே வருகிறது. 2014 முதல் 2017 வரையான காலகட்டத்தில் ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்கின் பெரும்பகுதியை ஐ.எஸ் அமைப்பு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
சமீப காலத்தில் ஈராக்கை உலுக்கிய மிக மோசமான தற்கொலை வெடிகுண்டு தாக்குதலாக பார்க்கப்படுவது,
2018 ஜனவரி மாதம் இதே பாக்தாத் சந்தைப்பகுதியில் இரு தற்கொலை குண்டுதாரிகள் முன்னெடுத்த தாக்குதலில் மொத்தமாக 38 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதேயாகும்.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஒழிக்கப்பட்டாலும், உள்ளூர் தீவிரவாத குழுக்கள் இன்னமும் செயற்பாட்டில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.