அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு சீனா முதன் முறையாக வாழ்த்து தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் 3-ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இதுவரை வாக்கு எண்ணும் பணிகள் முடிவுபெறவில்லை.
மேலும் தேர்தல் மோசடி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்,
தாம் தோற்கவில்லை என்றே தொடர்ந்து கூறி வருவதுடன், இதுவரை புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
இந்த நிலையிலேயே சீன வெளிவிவகார அமைச்சகம் முதன் முறையாக, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
இதுவரை அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகங்களின் எதிர்வினையை தாங்கள் கூர்ந்து கவனித்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க மக்களின் இந்த முடிவை தாங்கள் மதிப்பதாக கூறியுள்ள சீனா வெளிவிவகார அமைச்சகம்,
ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்ய தரப்பில் இதுவரை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கு வாழ்த்துகளை தெரிவிக்கவில்லை.
இறுதி முடிவு வெளியான பின்னரே, தங்கள் தரப்பில் வாழ்த்து தெரிவிக்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி புடினின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.