இத்தாலியில் கொரோனா நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இத்தாலியின் Naples நகரில் அமைந்துள்ள Cardarelli மருத்துவமனை என்னும் மருத்துவமனையின் நிலைமை எப்படி உள்ளது என்பதை, மருத்துவமனைக்கு வந்த நோயாளி ஒருவரே வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவில், அந்த வீடியோவை எடுக்கும் நபர், இது Cardarelli மருத்துவமனை, இந்த மனிதன் இறந்துகிடக்கிறார், நாங்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருக்கிறோம். இங்கே ஒரு பெண் மலம் மற்றும் சிறுநீருக்குள் கிடக்கிறார், அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துபோய்விட்டாரா என்பதுகூட தெரியவில்லை என வரிசையாக கொரோனா நோயாளிகளைக் காட்டுகிறார்.
கழிவறையில் இறந்துகிடக்கும் நபர், கொரோனா பரிசோதனைக்காக வந்தவர் என கருதப்படுகிறது. மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்ய காத்திருந்த அவர், கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், மருத்துவமனையின் கழிவறையிலேயே நிலைகுலைந்து இறந்துள்ளார்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த மரணம் தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
அந்த வீடியோவை எடுத்த Rosario Lamonica என்பவர், நாட்டில் என்ன நடக்கிறது என மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அதை தான் பதிவு செய்ததாக தெரிவிக்கிறார்.
அந்த நபர் விழுந்து கிடந்தார், நான் மருத்துவமனை ஊழியர்களிடம் உதவி கோரியபோது யாரும் கண்டுகொள்ள வில்லை, உன் வேலையைப் பார் என்று சிலர் கூறினார்கள் என்கிறார்.
இறந்து கிடக்கும் அந்த நபரும், சில முதியவர்களும், நானும் ஒரே அறையில் இருந்தோம் என்கிறார் Rosario.
இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சரான Luigi Di Maio, கழிவறையில் இறந்துகிடந்த நோயாளியைக் காட்டும் வீடியோ அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
ஒவ்வொரு குடிமகனின் உயிரும், உடல் நலமும் முக்கியத்துவம் வாய்ந்ததும் பாதுகாக்கப்படவேண்டியதும் ஆகும். உள்ளூர் அதிகாரிகளால் அதைச் செய்ய முடியவில்லை என்றால், நாடு அதைச் செய்தாகவேண்டும் என்கிறார்.
இதுவரை மரியாதை நிமித்தமாக நான் அமைதியாக இருந்தேன், இனி தலையிடுவதைத் தவிர வேறு வழியில்லை, குறிப்பாக நாட்டின் தென்பகுதி நிலைகுலையும் நிலையில் உள்ளது என்கிறார் Di Maio. இத்தாலியில், நேற்று ஒரு நாளில் மட்டுமே 636 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள், 37,978 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவியுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது.
இதுவரை இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43,589. இத்தாலி, கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளில், ஆறாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.