இன்று காலை நியூசிலாந்தை ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவாகிய நில நடுக்கம் ஒன்று குலுக்கியது பலருக்கு தெரிந்திருக்கலாம்.
ஆனால், நில நடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவமும் நிகழ்ந்தது.
நியூசிலாந்தில் இன்று காலை நிலநடுக்கம் தாக்கும்போது பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தொலைக்காட்சியில் நேரலையில் பேட்டி ஒன்றைக் கொடுத்துக்கொண்டிருந்தார்.
The Beehive என்று அழைக்கப்படும் அரசு கட்டிடம் ஒன்றில் இருந்தபடி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார் ஜெசிந்தா.
அப்போது The Beehive கட்டிடம் குலுங்க, இங்கே நாங்கள் ஒரு நில நடுக்கத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறோம், ஓரளவு பெரிய நிலநடுக்கம் தான் என்று கூறிய ஜெசிந்தா, சிரித்துக்கொண்டே என் பின்னால் உள்ள பொருட்கள் அசைவதை நீங்களே பார்க்கலாம் என்று கூறுகிறார்.
அவரிடம் பேட்டி எடுப்பவர், பிரதமர் அவர்களே, இப்போது நிலநடுக்கம் நின்று விட்டதா? உங்களால் பேட்டியைத் தொடரமுடியுமா என்று அக்கறையுடன் விசாரிக்க, சற்றும் யோசிக்காமல் முகம் நிறைய புன்னகையுடன், ஆம், பேட்டியைத் தொடரலாம், எனக்கு நேர் மேலே தொங்கு விளக்குகள் எதுவும் இல்லை.
நான் பாதுகாப்பான கட்டிடம் ஒன்றில்தான் இருக்கிறேன் என்று புன்னகையுடனே கூறுகிறார்.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், நில நடுக்கத்தின் நடுவே பிரதமர் ஜெசிந்தா அலட்டிக்கொள்ளாமல் புன்னகையுடன் பேட்டியாளருடன் பேசுவதைக் காணலாம்.