பெண்ணிடமிருந்து பூனைக்கு பரவிய கொரோனா..! விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுமா? நிபுணர்கள் அளித்த தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

பெல்ஜியம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து அவரது செல்லப்பிராணி பூனைக்கு நோய்த்தொற்று பரவியது கண்டறியப்பட்டுள்ளது.

பெண்ணோ பூனையோ அடையாளம் காணப்படவில்லை, ஆனால் பெல்ஜியத்தின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதியில் லீஜில் வசிக்கிறார்கள் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பூனை ஒன்றிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று பெல்ஜிய சுகாதார நிறுவனத்தின் வைரஸ் நோய்களின் தலைவரான ஸ்டீவன் வான் குட்ச் அறிவித்தார்.

ஒரு வாரத்திற்கு முன்பு பெண் ஒருவர் கொரோனா அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிய நிலையில், அவருடன் வாழ்ந்து வந்த பூனைக்கும் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

பூனைக்கு வயிற்றுப்போக்கு இருந்தது, வாந்தியெடுத்தது மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தது. ஆராய்ச்சியாளர்கள் பூனையின் மலத்தில் வைரஸைக் கண்டுபிடித்தனர் என்று வான் குட்ச் கூறினார்.

கொரோனா மனிதனிடமிருந்து விலங்குகளுக்கு பரவிய 3வது வழக்கு இதுவாகும். ஏற்கனவே இரண்டு நாய்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பூனைக்கு உறுதியானது இதுவே முதல் முறையாகும்.

கொரோனா மனிதனிடமிருந்து விலங்குகளுக்கு பரவுவது பொதுவானது என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் ஆபத்து மிகக் குறைவு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் உரிமையாளர்கள் செல்லப்பிராணிகளுடான தங்களது தொடர்பை குறைத்துக் கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்