கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக குணமடைந்த நோயாளிகளின் உதவியை நாடும் சீனா!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
#S

கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகளின் உதவியை நாடியுள்ளது சீன அரசாங்கம்.

மிக மோசமான நிலைமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா ஏற்றப்படும்போது, 24 மணி நேரத்திற்குள் அவர்களுடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக, சீன தேசிய மருந்துகள் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆகவே, இரத்தத்தை சேகரித்து, அதிலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து, நோயுற்றிருப்போருக்கு ஏற்றுவதற்காக இரத்த தானம் செய்யுமாறு கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகளிடம் சீன சுகாதாரத்துறை அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகளின் பிளாஸ்மாவில், கொரோனாவுக்கு எதிரான எதிரணுக்கள் காணப்படுகின்றன.

அவை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையிலிருக்கும் நோயாளிகளின் உடலில் இருக்கும் வைரஸின் அளவை குறைக்க உதவுகின்றன.

வுஹானிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள 11 நோயாளிகளுக்கு சென்ற வாரம் இத்தகைய பிளாஸ்மா ஏற்றப்பட்டது.

அவர்களில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். மேலும் ஒருவர் படுக்கையிலிருந்து எழுந்து நடமாடத் தொடங்கிவிட்டார், மற்றவர்கள் குணமடைந்து வருகிறார்கள்.

ஆகவே, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

நீங்கள் இரத்த தானம் செய்தால், உங்கள் உடலிலிருந்து இரத்தம் சேகரிக்கப்பட்டு, அதிலுள்ள பிளாஸ்மா மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டு, மீதமிருக்கும் சிவப்பணுக்கள் முதலானவை உங்கள் உடலிலேயே திரும்ப ஏற்றப்படும்.

எங்களுக்கு பிளாஸ்மா மட்டும் போதும் என்று கூறியுள்ளார் மருத்துவர் ஒருவர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்