கொரோனா பாதிப்புக்கு பிரபல திரைப்பட இயக்குநர் குடும்பத்துடன் மரணம்: வுஹான் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கொடிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவின் பிரபல திரைப்பட இயக்குநர்களில் ஒருவர் குடும்பத்துடன் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் வசித்துவந்த 55 வயதான சாங் கை என்பவரே பெப்ரவரி 14- ஆம் திகதி நோய் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார்.

வுஹான் நகரம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முற்றாக முடக்கப்பட்டுள்ள நிலையில், நோய் அறிகுறி கொண்டவர்கள் தங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என நகர நிர்வாகம் வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையிலேயே, திரைப்பட இயக்குநர் சாங் கை, அவரது பெற்றோர் மற்றும் அவரது சகோதரி ஒருவர் என நால்வரும் ஒரே குடியிருப்பில் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்துள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது வுஹான் நகர நிர்வாகத்தின் சுய தனிமைப்படுத்துதல் என்ற கொள்கையை கேள்விக்கு உள்ளாக்கிய்யுள்ளது.

வுஹான் நிர்வாகம் கொரோனா வைரஸ் பாதிப்பை சரியாக கையாளவில்லை என்பதற்கு திரைப்பட இயக்குநரின் குடும்பம் ஒன்றின் பின் ஒன்றாக மரணமடைந்துள்ள சம்பவமே சிறந்த எடுத்துக்காட்டு என நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், நோய் பாதிப்பு கொண்டவர்கள் ஒரே குடியிருப்பில் தங்குவது என்பது ஆபத்தானது என்பது மட்டுமின்றி அதிக உயிரிழப்பையும் ஏற்படுத்தும் என வுஹான் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

ஜனவரி 25 அன்று இயக்குநர் சாங்கின் தந்தைக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் முதலில் தென்பட்டுள்ளது.

இதனையடுத்து சாங் தமது வயதான தந்தையை வுஹானில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றார், ஆனால் ஒவ்வொரு முறையும் படுக்கைகள் பற்றாக்குறையால் திருப்பி விடப்பட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு, சாங்கின் தந்தை மரணமடைந்துள்ளார்.

தொடர்ந்து பெப்ரவரி 2 ஆம் திகதி, சாங்கின் தாயார் கொரோனா வியாதியால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

பெப்ரவரி 14 ஆம் திகதி சாங் மற்றும் அவரது சகோதரி ஆகிய இருவரும் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். சாங்கின் மனைவி தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இயக்குநர் சாங்கின் மறைவுக்கு அவரது நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றியவர்கள் என திரளானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்