சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொடர்பில் கண்காணிப்பில் இருந்த வெளிநாட்டு மாணவர், பயத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள கிங் அப்துல்அஸிஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருபவர் 30 வயது மதிக்கத்தக்க அந்த மாணவர்.
கடந்த 8 மாதங்களாக சவுதி அரேபியாவில் குடியிருந்து வரும் இவர், கொரோனா பாதிப்பு தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கிங் ஃபஹத் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.
பரிசோதனை முடிவுகளில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்த நிலையில், இறுதி முடிவுக்காக அங்குள்ள மருத்துவர்கள் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் பரிசோதனை முடிவுகளுக்கு கால தாமதம் ஏற்படுவதால், தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தவறாக புரிந்துகொண்ட அந்த வெளிநாட்டு மாணவர், மருத்துவமனையில், தமது அறையின் ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தை கிங் ஃபஹத் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சவுதி பொலிசார் உறுதி செய்துள்ளனர். மேலும், அந்த மாணவர் எந்த நாட்டவர் உள்ளிட்ட தகவல்களை பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த மாத தொடக்கத்தில், சவுதி அரேபியா தனது குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான சீனா பயணத்தை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.