கொடிய வியாதியால் தத்தளிக்கும் சீனா... விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை: பீதியில் உலக நாடுகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் கொடிய மர்ம வியாதியால் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மர்ம வியாதி தொடர்பில் தகவல் வெளியிட்ட சீன அரசாங்கம், வெறும் 50 பேரில் மட்டுமே உறுதி செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் 1723 பேர் இதுவரை அந்த கொடிய வியாதிக்கு இலக்கானதாக பிரித்தானிய விஞ்ஞானிகள் சனிக்கிழமை அம்பலப்படுத்தியுள்ளனர்.

லண்டன் இம்பீரியல் கல்லூரியில் செயல்பட்டுவரும் MRC Centre for Global Infectious Disease Analysis (MRC GIDA) அமைப்பின் விஞ்ஞானிகளே இந்த கொடிய வியாதி தொடர்பில் ஆய்வு மேற்கொண்டவர்கள்.

பிரித்தானிய அரசாங்கம் மற்றும் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்டவைகளுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகும் இது.

சீனாவின் வூவான் நகரில் டிசம்பரில் முதன் முறையாக இந்த வியாதி தொடர்பில் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து தாய்லாந்தில் இருவரும், ஜப்பானில் ஒருவரும் இந்த மர்ம வியாதியால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

கோரோனா கிருமி வகையை சார்ந்த மர்ம கிருமி ஒன்றால் இந்த வியாதி படர்வதாக விஞ்ஞான உலகம் யூகம் தெரிவித்துள்ளது.

கடுமையான நிமோனியாவே இந்த வியாதிக்கு முதல் அறிகுறி. கடந்த 2002 மற்றும் 2003 காலகட்டத்தில் சீனா மற்றும் ஹாங்காங்கில் கோரோனா கிருமியால் ஏற்பட்ட மர்ம வியாதிக்கு சுமார் 770 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடம் எனவும், வூவானில் இருந்து நோய்க்கிருமிகள் தாய்லாந்துக்கும் ஜப்பானுக்கும் வியாபித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகலாம் என பிரித்தானிய விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, சீனாவில் இருந்து மர்ம வியாதி தொடர்பில் கலங்கடிக்கும் தகவல் வெளியானதும், அமெரிக்கா மற்றும் ஹாங்காங் விமான நிலையங்களில் கடுமையான சோதனைக்கு பயணிகளை உட்படுத்தி வருகின்றனர்.

மேலும் சீனாவில் இருந்து நேரடி விமான சேவைகள் நடைபெறும் நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ நகர விமான நிலையங்களிலும் தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேவேளை சீனா இதுவரை பயண கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கவில்லை. மட்டுமின்றி 11 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வூவான் நகரில் இருந்து நாள் ஒன்றுக்கு 3400 பேர் வரை வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...