பிரித்தானியாவில் இருந்து சடலமாக சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட 23 பேர்... உறவினர்கள் ஆறுதல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

கடந்த மாதம் லண்டன் அருகே கன்டெய்னர் லொறியில் இறந்து கிடந்த 39 வியட்நாமிய மக்களின் சடலங்கள் சொந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

பலியான 23 பேரின் உடல்கள் சனிக்கிழமை அதிகாலை ஹனோய் நொய் பாய் விமான நிலையத்திற்கு வந்ததாக உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏழு சடலங்கள் திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்பு பிரித்தானியாவில் தகனம் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ வியட்நாம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக புதன்கிழமை 16 உடல்கள் வடக்கு-மத்திய வியட்நாமில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன, அங்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பிரித்தானியாவுக்கு கடத்தப்பட்ட பின்னர் கன்டெய்னர் லொறியின் பின்புறத்தில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஏழைகளை, மேற்கு நாடுகளுக்கு ஆபத்தான பயணங்களுக்கு அனுப்பும் சட்டவிரோத வர்த்தகத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 10 பேரை வியட்நாமில் பொலிசார் கைது செய்துள்ளனர். திங்களன்று, பிரித்தானியா லொறி ஓட்டுநர் சட்டவிரோத குடியேற்றத்திற்கு உதவவும், குற்றவியல் சொத்துக்களை வாங்கவும் சதி செய்ததாக ஒப்புக்கொண்டார்.

வியட்நாமில், மோசமான வேலை வாய்ப்புகள், சுற்றுச்சூழல் பேரழிவுகள் மற்றும் நிதி நெருக்கடி ஆகியவை மக்களை நாட்டை விட்டு வெளியேறத் தூண்டுகின்றன.

பாதிக்கப்பட்ட ந்யூயென் டின் லுவாங்கின் தந்தை நுயென் டின் கியா, தனது மகன் ஒரு நல்ல வாழ்க்கைக்கான நம்பிக்கையில் பிரித்தானியாவுக்கு சென்றதாக கூறினார்.

இந்த இழப்பு எனது குடும்பத்திற்கு எவ்வளவு பெரியது என்பதை நான் எவ்வாறு விவரிக்க முடியும். ஆனால் அவரது உடல் திரும்புவது வலியைக் குறைக்க உதவியது என்று வியாழக்கிழமை தனது மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் கியா கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்