வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் தன்னுடைய வங்கிக் கணக்கை பார்த்த போது, அதிலிருந்து பல லட்சம் ரூபாய் ஹேக் செய்து திருடியுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் பிரபின் பெலிக்ஸ் ராஜன். மென்பொறியாளரான இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக நைஜீரியாவில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த மார்ச் மாதம் 9-ஆம் திகதி சொந்த காரணங்களால் ஒரு மாதம் விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

சொந்த ஊருக்கு திரும்பிய போது அவருடைய அவருக்கு சொந்தமான திருவிதாங்கோடு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கில் 4,72,676 ரூபாய் பணம் இருந்துள்ளது.

இதனால் அதை எண்ணி கடந்த மார்ச் மாதம் 10-ஆம் திகதி ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க சென்ற போது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நைஜீரியாவில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்த மார்ச் 8-ஆம் திகதி 97,407 ரூபாயும் மார்ச் 9-ஆம் திகதி 95,933 ரூபாயும் இணைய வழி வங்கி சேவை மூலம் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து பிரபின் பெலிக்ஸ் ராஜன் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்து புகார் அளித்தார். மறுநாள் திருவிதாங்கோடு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு சென்று புகார் அளிக்க சென்று வங்கி கணக்கை பார்த்த போது 10-ஆம் திகதி இரவும் 85,273 ரூபாய் இணைய வழி பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பிரபின் பெலிக்ஸ் ராஜன் வங்கி மேலாளரிடம் புகார் அளித்து இணைய வழி வங்கி சேவையை முடக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் வங்கி அலுவலர்கள் முறையாக பரிமாற்ற தகவல்களை கொடுக்காமலும் நடவடிக்கை எடுக்காமலும் அவரை அலைக்கழித்துள்ளனர்.

இதையடுத்து ஒரு மாதம் விடுப்பு முடிந்துவிட்டதால், அவர் நைஜீரியா சென்றுவிடவே வங்கி நிர்வாகம் இந்த மோசடி குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ள நிலையில், கடந்த 11-ஆம் திகதி அதே வங்கிக் கணக்கில் இருந்து 95,933 ரூபாயை மர்ம நபர் இணைய வழி சேவை மூலம் திருடியுள்ளார்.

இதனால் மீண்டும் அதிர்ச்சியடைந்த அவர், தன் மனைவி சந்தூரியிடம் இதைப் பற்றி கூற, அவர் உடனடியாக வங்கி கிளையில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் மீண்டும் வங்கி நிர்வாகம் அலட்சியம் காட்டியதால் சந்தூரி ரெஜிலா லெட் 20-ஆம் திகதி தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பொலிசார் சைபர் கிரைம் பொலிசாருடன் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில் முதற் கட்ட விசாரணையில், சீனாவில் இருந்து மர்ம நபர் யாரோ இன்ஜினியர் வங்கி கணக்கை ஹேக் செய்து அந்த கணக்கில் இருந்த பணத்தை இந்தியாவில் உள்ள பல வங்கி கிளைகளில் உள்ள வங்கி கணக்கிற்கு மாற்றி கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers