தொடர்ந்து பற்றி எரியும் பூமியின் நுரையீரல்.. அச்சத்தில் உலக நாடுகள்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க, அண்டை நாடுகளின் உதவியை பொலிவியா நாடியுள்ளது.

உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான். இதன் மழைக்காடுகள் கிட்டத்தட்ட 55 லட்சம் சதுர கிலோ மீற்றருக்கு பரப்பளவை கொண்டவை.

பூமி வெப்பமயமாதலை பெருமளவு இந்த காடுகள் கட்டுப்படுத்துவதால், பூமியின் நுரையீரல் என்று அமேசான் காடுகள் அழைக்கப்படுகின்றன.

அரிய வகையான மரங்கள், மூலிகைகள், விலங்குகள் மற்றும் பறவைகளைக் கொண்ட இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீயில் எரிந்து வருகின்றன.

மள மளவென பரவும் காட்டுத் தீயை கட்டுப்படுத்துவது மிகப்பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக, பொலிவியாவில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான நிலங்களில் தீ பரவியதால், கரும்புகை வெளியேறி வருகிறது.

இதனை அணைக்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் மற்றும் ஆயுதப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொலிவியா, பிரேசில் மற்றும் பராகுவே ஆகிய 3 நாடுகளை இணைக்கும் Rio Negro Bridge எல்லைப்பகுதியிலும் காட்டுத் தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது.

இதனால் அச்சம் கொண்டுள்ள பொலிவியா அரசு, அண்டை நாடுகளான பராகுவே, பிரேசிலின் உதவியை நாடியுள்ளது. இதற்கிடையில், கடந்த ஆண்டை விட அமேசான் வனப்பகுதிகளில் அதிக பரப்பளவுக்கு தீ பற்றியதால், பருவ நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்